உத்தரப் பிரதேசத்தில் காவல் துறை பெண் துணை ஆணையர், சாதாரணப் பெண் போல வேடமணிந்து சென்று இரவு நேரத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார். அவரின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் பெண் துணை ஆணையர் சுகண்யா சர்மா, சாதாரணப் பெண் போல உடையணிந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இரவு நேரத்தில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் காவல் துறையின் அவசரகால உதவி எத்தனை விரைவாகப் பெண்களுக்கு கிடைக்கிறது என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக அவர் இவ்வாறு ரோந்து சென்றுள்ளார்.
நள்ளிரவில் ஆக்ரா ரயில் நிலையத்திற்கு வெளியே இருந்தவாறு காவல் துறையின் அவசர உதவி எண்ணான 112 -க்கு தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளார். தான் சுற்றுலாவுக்கு வந்ததாகவும், தற்போது நேரமாகிவிட்டதால், வெறிச்சோடிய சாலையால் அச்சம் அடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
காவல் துறையினர் இருப்பிடத்தின் லொகேஷனைப் பெற்றுக்கொண்டு அழைப்பை துண்டித்துள்ளனர். சில நிமிடங்களில் பெண் ரோந்துக் காவலர்களிடமிருந்து அழைப்பு வந்துள்ளது. அவர்கள் இவருக்கு தைரியம் கூறி, சில நிமிடங்களில் உதவிக்கு காவலர் ஒருவர் வருவார் எனக் கூறியுள்ளனர்.
இதேபோன்று சிறிது நேரத்தில் துணைக்கு காவலர் ஒருவர் வந்துள்ளார். அப்போது அவர்களிடம் தான் துணை ஆணையர் என்றும், அவசர உதவி மைய செயல்பாடு குறித்து ஆய்வு செய்ததாகவும் சுகண்யா கூறியுள்ளார்.
படிக்க | சொல்லப் போனால்... செந்தில் பாலாஜியும் 4.34 லட்சம் விசாரணைக் கைதிகளும்!
அதோடுமட்டுமின்றி, தொடர்ந்து ஆட்டோவிலும் சுற்றுலாப் பயணி போலவே பயணித்துள்ளார். ஆட்டோ கட்டணத்தையும், இறங்க வேண்டிய இடத்தையும் தெளிவுபடுத்திவிட்டு ஆட்டோவில் ஏறியுள்ளார்.
ஆட்டோ ஓட்டுநரிடம் நகரத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்தும் பேசியுள்ளார். ஆட்டோ ஓட்டுநர் அளித்த தகவல்களையும் சேகரித்துள்ளார். பின்னர் தான் இறங்க வேண்டிய இடத்தில் ஆட்டோ ஓட்டுநர் இறக்கிவிட்டுச் சென்றுள்ளார்.
பெண்கள் பாதுகாப்புக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை ஆய்வு செய்ய, சாதாரணப் பெண்ணாக இரவில் பயணித்து ஆய்வு செய்த பெண் துணை ஆணையர் சுகண்யா சர்மாவை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இது பெண்கள் பாதுகாப்பை நோக்கிய சரியான முதல்படி என சமூக ஆர்வலர் தீபிகா நாராயணன் பதிவிட்டுள்ளார்.
அடுத்தடுத்து பண்டிகை நாள்கள் வரவுள்ளதால், பெண்கள் பாதுகாப்புக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும் இதில் சுகண்யா ஆய்வு செய்துள்ளார்.
தேர்ச்சி பெற்ற மருத்துவரான சுகண்யா சர்மா, ஐபிஎஸ் தேர்வெழுதி விருப்பத்தின் பேரில் காவல் துறையில் சேர்ந்து துணை ஆணையராகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
படிக்க | ஒட்டுமொத்த ஊருக்கும் ஒரே சமையலறை... அசத்தும் குஜராத் கிராமம்!