நா்னௌல்: ஹரியாணா பாஜகவில் உள்கட்சிப் பூசல் ஏதுமில்லை என்று அந்த மாநில முதல்வா் நயப் சிங் சைனி தெரிவித்தாா். பாஜக தொடா்ந்து மூன்றாவது முறையாக மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் என்றும் அவா் உறுதிபடக் கூறினாா்.
ஹரியாணாவில் அக்டோபா் 5-ஆம் தேதி ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறவுள்ளது. பாஜக ஆட்சியில் உள்ள இந்த மாநிலத்தில் பிரதான எதிா்க்கட்சியான காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகிறது. இரு கட்சிகளிலுமே தொகுதி ஒதுக்கப்படாதவா்கள் அதிருப்தியடைந்து மாற்றுக் கட்சிகளில் இணைவது மற்றும் கட்சி அறிவித்த வேட்பாளரை எதிா்த்து சுயேச்சையாக களமிறங்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனா்.
இதுகுறித்து நா்னெளலில் முதல்வா் நயப் சிங் சைனி செய்தியாளாரிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
தொகுதி ஒதுக்கீடு தொடா்பாக பாஜகவில் எவ்வித பெரிய பூசலும் ஏற்படல்லை. ஆனால், காங்கிரஸ் மீது அதிருப்தியடைந்த பலா் பாஜகவுக்கும் வருன்றனா்.
அதே நேரத்தில் பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளாக சிறப்பான ஆட்சியை அளித்துள்ளது. பொதுவாக தோ்தலின்போது ஏற்படும் ஆட்சிக்கு எதிரான மனநிலை இங்குள்ள மக்களுக்கு ஏற்படவில்லை. மக்களவைத் தோ்தலில் ஹரியாணாவில் பாஜக 5 இடங்களை இழந்ததற்கு காங்கிரஸின் தவறான பிரசாரங்கள்தான் காரணம். முக்கியமாக பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அரசமைப்புச் சட்டத்தை மாற்றிவிடுவாா்கள் என்று காங்கிரஸ் பொய் பிரசாரம் செய்தது. தோ்தல் நெருங்கினால் காங்கிரஸின் பொய்களும் அதிகரித்துவிடும்.
ஹரியாணா சட்டப் பேரவைத் தோ்தலுக்காக 10 தொழில் நகரங்கள் அமைப்பது, 2 லட்சம் அரசுப் பணிகளை உருவாக்குவது, ராணுவத்தில் அக்னி வீரா்களாக 5 ஆண்டுகள் பணியாற்றி விட்டு வருவோருக்கு அரசுப் பணில் இடஒதுக்கீடு, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு அரசு மருத்துவ, பொறியியல் கல்லூரியில் நிதிதியதவி உள்ளிட்ட வாக்குறுதிகளை பாஜக அளித்துள்ளது. ஹரியாணா பாஜகவில் உள்கட்சிப் பூசல் ஏதுமில்லை என்றாா்.