

திருநங்கை என்று தெரிய வந்ததால் தனியார் பள்ளியில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியரின் மனுவுக்கு உத்தரப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்கள் மற்றும் மத்திய அரசு பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவரது மனுவின் மீது பதிலளிக்குமாறு மத்திய அரசு மற்றும் குஜராத், உத்தரபிரதேச மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.
"மனுதாரரின் பாலின அடையாளம் தெரியவந்ததையடுத்து, உத்தரப் பிரதேசம் மற்றும் குஜராத்தில் உள்ள இருவேறு தனியார் பள்ளிகளில் அவரது வேலை பறிக்கப்பட்டுள்ளது. மனுதாரர் இரண்டு வெவ்வேறு உயர் நீதிமன்றங்களில் வழக்கு தொடர முடியாது என்று கூறுகிறார்.
எனவே இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு மற்றும் தொடர்புடைய மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. நான்கு வாரங்களுக்குள் இதற்கு பதிலளிக்க வேண்டும்" என்று அந்த அமர்வு கூறியது.
உத்தரப் பிரதேசம் மற்றும் குஜராத்தில் உள்ள இரண்டு தனியார் பள்ளிகள் தனது பாலின அடையாளத்தின் காரணமாக தன்னை பணிநீக்கம் செய்ததாக திருநங்கை குற்றம் சாட்டினார்.
31 வயதான ஜேன் கௌஷிக், 2022 டிசம்பரில் உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இருந்து திருநங்கை என்பதால் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும், பின்பு 2023 ஜூலையில் குஜராத்தில் உள்ள மற்றொரு பள்ளியில் தனது பாலின அடையாளம் குறித்து வெளிப்படையாக கூறியதனால் அங்கு வேலை மறுக்கப்பட்டதாகவும் தனது மனுவில் கூறியுள்ளார்.
இந்த இரண்டு பள்ளிகளின் நடவடிக்கையும் சமத்துவத்திற்கான தனது அடிப்படை உரிமையை மீறுவதாகவும், பாலின அடிப்படையிலான பாகுபாடுகள் கடைபிடிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
தான் அனுபவித்து வரும் சிரமங்களைப் போல வேறு எந்த திருநங்கைகளும் எதிர்கொள்வதில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்கு, மத்திய அரசிடமிருந்து முறையான வழிகாட்டுதல்கள் வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.