ஓபிசி இடஒதுக்கீடு தொடர்பான அறிக்கை சமர்ப்பிப்பு!

நீதிபதி பிஎஸ் வர்மா தலைமையிலான ஓபிசி இடஒதுக்கீடு தொடர்பான ஆணையம் தனது அறிக்கையை முதல்வர் புஷ்கர் சிங் தாமியிடம் வெள்ளிக்கிழமை சமர்ப்பித்தது. 
முதல்வர் புஷ்கர் சிங் தாமி
முதல்வர் புஷ்கர் சிங் தாமி

டேராடூன்(உத்தரகண்ட்): நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முதல் மாநிலமாக உத்தரகண்ட் மாறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், நீதிபதி பிஎஸ் வர்மா தலைமையிலான ஓபிசி இடஒதுக்கீடு தொடர்பான ஆணையம் தனது அறிக்கையை முதல்வர் புஷ்கர் சிங் தாமியிடம் வெள்ளிக்கிழமை சமர்ப்பித்தது. 

2022 ஆம் ஆண்டில் நடைபெற்ற மாநில சட்டப்பேரவைத் தேர்தலின் போது பாஜக அளித்த முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று உத்தரகண்ட் மாநிலத்திற்கான பொது சிவில் சட்டம். 

உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு, தனது தலைமையிலான முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே பொது சிவில் சட்டம் உருவாக்க ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் ஒரு குழுவை அமைக்க ஒப்புதல் அளித்தார். இந்த குழு தனது அறிக்கையை முதல்வரிடன் விரைவில் சமர்ப்பிக்க உள்ளது. 

இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு, உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் நீதிபதி பிஎஸ் வர்மா தலைமையில் ஓபிசி இடஒதுக்கீடு தொடர்பான ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் வெள்ளிக்கிழமை(ஜன.26) முதல்வர் புஷ்கர் சிங் தாமியை அவரது இல்லத்தில் சந்தித்து ஓபிசி இடஒதுக்கீடு தொடர்பான தனது அறிக்கையை சமர்ப்பித்தது. 

இதற்கிடையே, உத்தரகண்ட் சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் பிப்ரவரி 5-ஆம் தேதி டேராடூனில் கூடுகிறது என தகவல் வெளியானது.

இது தொடர்பாக உத்தரகண்ட் சட்டப்பேரவை செயலகம் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், உத்தரகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக பிப்ரவரி 5 ஆம் தேதி சட்டப்பேரவை கூடுகிறது. 

மாநிலத்திற்கான பொது சிவில் வரைவைத் தயாரிக்கும் நிபுணர் குழுவின் பதவிக்காலம் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் புஷ்கர் சிங் தாமி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

"பொது சிவில் சட்டம் குழு தனது பணியை கிட்டத்தட்ட முடித்து விட்டது. அதை தொகுக்கவும், வேறு சில சம்பிரதாய பணிகளை முடிப்பதற்காக இன்னும் சிறிது கால அவகாசம் தேவைப்படுவதால், 15 நாள்கள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர்கள் அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளனர். அறிக்கையை பெற்றவுடன் அடுத்த நடவடிக்கைகளை எடுப்பதற்காக பேரவைக் கூட்டத்தை கூட்டுவோம்" என்று உத்தரகாண்ட் முதல்வர் கூறினார்.

நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான குழுவின் பதவிக்காலம் ஏற்கனவே மூன்று முறை நீட்டிக்கப்பட்டுள்ளது, கடைசியாக கடந்த ஆண்டு செப்டம்பரில் நான்கு மாதங்கள் நீட்டிக்கப்பட்டது.

இதற்கிடையே, உத்தரகண்ட்டில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்பட்டவுடன் பாஜக ஆளும் அசாம் மற்றும் குஜராத் மாநிலங்களில் பொது சிவில் சட்ட மசோதா உடனடியாக நிறைவேற்றப்படும் என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com