ஐதராபாத் : பிகாரில் நிலவி வரும் அரசியல் குழப்பம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பாஜக ஆதரவுடன் பிகார் முதல்வராக 9-வது முறையாக இன்று(ஜன.28) மீண்டும் பதவியேற்றுள்ளார் ஐக்கிய ஜனதா தள கட்சித் தலைவர் நிதீஷ் குமார்.
இந்நிலையில், நிதீஷ் குமார், பிரதமர் மோடி மற்றும் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகிய மூவரும், பிகார் மாநில மக்களை ஏமாற்றிவிட்டதாக ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய ஓவைசி, “ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் பாஜக ஆகிய மூன்று கட்சிகளும், பிகார் மாநில மக்களை ஏமாற்றிவிட்டன. மாநிலத்தின் வளர்ச்சி தடைபட்டுள்ளது.
நிதீஷ் குமார் பாஜகவிடம் மீண்டும் செல்வார் என்று தொடர்ந்து கூறி வந்தேன்.நிதீஷ் குமாரின் செயலை அரசியல் சந்தர்ப்பவாதம் என்று ஏற்றுக்கொள்ள முடியாது.
என்னை பாஜகவின் பி-டீம் என்று விமர்சனம் செய்த நிதீஷ் குமார், இப்போது வெட்கமில்லாமல் அதே கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளார். பிகார் முதல்வராக பெயரளவில் மட்டுமே நிதீஷ் குமார் செயல்படுவார். அவருடைய பின்புலத்தில் இருந்துகொண்டு, ஆர்எஸ்எஸ் அரசாங்கமும் பிரதமர் மோடியும் பிகார் அரசை வழிநடத்துவார்கள்.
முன்னதாக, பிகாரில் எங்கள் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் நால்வரை ராஷ்டிரிய ஜனதா தளம் தங்கள் கட்சியில் இணைத்துக் கொண்டது. இப்போது அதே நிலைமை அக்கட்சிக்கும் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.