நமது சிறப்பு நிருபர்
புது தில்லி, ஜன. 31: புதிய நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற வருகை தந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு இணையாக தமிழக செங்கோலுக்கு புதன்கிழமை மரியாதை கிடைத்தது.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வந்து இறங்கியபோது மக்களவையின் இணை இயக்குநர் அந்தஸ்தில் இருக்கும் மார்ஷெல் ராஜீவ் சர்மா "செங்கோல்' ஏந்தியவாறு முன்னே சென்றார்.
தமிழகத்தைச் சேர்ந்த ஆதீனங்களால் முதல் பிரதமரான நேருவிடம் இந்த செங்கோல் வழங்கப்பட்டது.
அந்த பாரம்பரியத்தைத் தழுவி கடந்தாண்டு புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறக்கப்பட்டபோது பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழ்நாட்டில் புதுப்பிக்கப்பட்ட செங்கோல் ஒப்படைக்கப்பட்டது.
அந்நிகழ்வில் பிரதமரால் மக்களவைக்குள் கொண்டு செல்லப்பட்ட செங்கோல், அரசின் கலாசார சின்னமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு மக்களவையில் அவைத் தலைவர் மாடத்துக்கு அருகே கண்ணாடிக் கூண்டில் வைக்கப்பட்டிருந்தது. இந்த செங்கோல் புதன்கிழமை காலையில் குடியரசுத் தலைவரை வரவேற்கும் விதமாக பிரதான நுழைவாயில் (கஜதுவாரம்) வரை கொண்டு வரப்பட்டது. வாத்திய இசை முழங்க செங்கோலை பின்தொடர்ந்து வந்த குடியரசுத் தலைவர் மக்களவைக்குள் நுழையும்போது, இரு அவை உறுப்பினர்களும் கரவொலி எழுப்பி அவரை வரவேற்றனர்.