
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவுபெற்றது.
மக்களவை கூட்டத்தொடர் இன்று காலை கூடியவுடன், வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா மீதான விவாதத்தில் காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி பேசிய கருத்துக்கு மன்னிப்பு கோர வலியுறுத்தி ஆளும் பாஜக எம்பிக்கள் முழக்கங்கள் எழுப்பின.
இதனிடையே, அமெரிக்காவின் பரஸ்பர வரிவிதிப்பு குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் முழக்கமிட்டதால் பகல் 12 வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
பகல் 12 மணிக்கு மீண்டும் அமளி தொடர்ந்த நிலையில், அவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக மக்களவை தலைவர் ஓம் பிர்லா தெரிவித்தார்.
மாநிலங்களவையும் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், பகல் 1 மணிக்கு அவைத் தலைவர் ஜகதீப் தன்கர் தலைமையில் கூடியது. அவை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்த உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்த ஜகதீப் தன்கர், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு ஜனவரி 31 ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கிய நிலையில், பிப். 1 ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். பிப். 13 ஆம் தேதியுடன் முதல் அமர்வு நிறைவுபெற்றது.
தொடர்ந்து, மார்ச் 10 ஆம் தேதி இரண்டாம் அமர்வு தொடங்கியது. இதில், வங்கி சட்டத் திருத்த மசோதா, குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா, ரயில்வே சட்டத் திருத்த மசோதா உள்ளிட்டவை தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனம் செய்ததற்கு இரு அவைகளிலும் ஒப்புதல் பெறப்பட்டது.
இறுதியாக வக்ஃப் சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு, இரு அவைகளிலும் 12 மணிநேரத்துக்கு மேலாக விவாதம் நடத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
அடுத்ததாக வருகின்ற ஜூலை மாதத்தில் மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.