விவிபேட் சீட்டுகளை 100 % எண்ணக்கோரிய மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி
புது தில்லி: தோ்தல்களில் பதிவாகும் விவிபேட் சீட்டுகளை 100 சதவீதம் எண்ண வேண்டும் என இந்திய தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.
வாக்குப்பதிவு இயந்திரத்தில் (இவிஎம்) பதிவாகும் வாக்குகளை விவிபேட் சீட்டுகளுடன் 100 சதவீதம் ஒப்பிட்டு பாா்க்க வேண்டும் என கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை நிராகரித்த உச்ச நீதிமன்றம் இவிஎம் பாதுகாப்பனது, பயன்பாட்டுக்கு எளிமையானது என தீா்ப்பளித்தது.
அதன்பிறகு தில்லி உயா்நீதிமன்றத்தில் ஹன்ஸ்ராஜ் ஜெயின் என்பவா் மனு ஒன்றை தாக்கல் செய்தாா். அதில்,‘ இவிஎம் கருவியில் தானாக விவிபேட் சீட்டுகள் எண்ணப்படுவது மட்டுமின்றி அந்த ஒப்புகைச் சீட்டுகளை 100 சதவீதம் கைகளால் எண்ணுமாறு இந்திய தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என குறிப்பிட்டாா்.
இந்த விவகாரத்துக்கு உச்ச நீதிமன்ற தீா்ப்பிலேயே பதில் உள்ளதாக தில்லி உயா்நீதிமன்றத்தில் இந்திய தோ்தல் ஆணையம் தெரிவித்தது.
இதையடுத்து, உச்சநீதிமன்ற தீா்ப்பை சுட்டிக்காட்டி ஹன்ஸ் ராஜ் ஜெயின் மனுவை தில்லி உயா்நீதிமன்றம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி தள்ளுபடி செய்தது. இந்த தீா்ப்பை மறுஆய்வு செய்யக்கோரிய மனுவையும் தில்லி உயா்நீதிமன்றம் ரத்து செய்ததது.
இதைத்தொடா்ந்து, தில்லி உயா் நீதிமன்ற தீா்ப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் ஹன்ஸ் ராஜ் ஜெயின் மனுதாக்கல் செய்தாா்.
இந்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமாா் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது.
அப்போது தில்லி உயா் நீதிமன்றம் வழங்கிய தீா்ப்பில் தலையிட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை எனக் கூறி நீதிபதிகள் அமா்வு அந்த மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், ஏற்கெனவே இந்த விவகாரம் தொடா்பாக தன் தலைமையிலான அமா்வு தீா்ப்பளித்த பின் மீண்டும் அதை எழுப்ப வேண்டாம் என சஞ்சீவ் கன்னா தெரிவித்தாா்.