தஹாவூர் ராணா வழக்கில் இந்தியா வென்றது எப்படி? திருப்புமுனையாக இருந்தது என்ன?

தஹாவூர் ராணா வழக்கில் இந்தியா வென்றது எப்படி என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தஹாவூர் ராணா
தஹாவூர் ராணா
Published on
Updated on
2 min read

மும்பை 26/11 தாக்குதலில் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படும் தஹாவூா் ராணாவை (64) இந்தியாவுக்கு நாடு கடத்தும் வழக்கில், வெற்றி பெற்றது எப்படி? வழக்குக்கு சாதகமாக அமைந்த இரண்டு விஷயங்கள் பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வழக்கில், நெருக்கமாக இருந்து செயல்பட்ட அதிகாரிகள் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த தகவலில், இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டால் ஆபத்து இருப்பதாக ராணா வைத்தக் கோரிக்கையை சட்டப்பூர்வமாக அணுகி தவிடுபொடியாக்கியதும், இந்தியாவின் தூதரக உறவும்தான் முக்கியத்துவம் பெற்றது என்கிறார்கள்.

நாட்டையே உலுக்கிய 2008-ஆம் ஆண்டு மும்பையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 160-க்கும் மேற்பட்டோா் பலியாகினர்.

லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத இயக்கம் நடத்திய இந்தத் தாக்குதலில், பாகிஸ்தானை பூா்விகமாகவும் கனட குடியுரிமைப் பெற்றவருமான தஹாவூா் ராணா கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. அவர் மீது பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டில், லஷ்கா்-ஏ-தொய்பா இயக்கத்துக்கு நிதி உதவி உள்ளிட்ட உதவிகளை செய்தது நிரூபிக்கப்பட்டது.

இதனைத்தொடா்ந்து, அவரை குற்றவாளி என்று அமெரிக்க நீதிமன்றம் தீா்ப்பளித்தது. இதையடுத்தே, அவரை இந்தியாவுக்குக் கொண்டு வர மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஆனால் தன்னை இந்திய சிறையில் சித்திரவதை செய்வார்கள் என்று கூறி, நாடு கடத்துவதற்கு எதிராக ராணா தாக்கல் செய்த மனுவை கடந்த ஜன.21-ஆம் தேதி அமெரிக்க உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

இந்த வழக்கு விசாரணையின்போது, ராணாவின் வாதத்தை, இந்திய அதிகாரிகள் சட்டப்பூர்வமாக அணுகி, சித்ரவதை செய்யப்பட மாட்டார் என்பதை நிரூபித்ததோடு, இந்தியா சென்றால், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறிய ராணாவின் வாதத்துக்கு, பாதுகாப்பு அளிப்பது, குற்றவாளியின் பின்னணியைப் பொருத்தது அல்ல, அவரது குற்றப் பின்னணியைப் பொருத்ததுதான் என்று அமெரிக்க அதிகாரிகளை நம்ப வைத்தனர்.

அதுபோல, இந்தியாவில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் ராணா மீது வழக்குத் தொடரப்படவில்லை என்பதால், அதன் கீழ் நடவடிக்கை எடுப்பது சட்டத்தை மீறி எடுக்கப்படும் இரட்டை வழக்கு நடைமுறையாகாது என்றும் இந்திய அதிகாரிகள் விளக்கியிருக்கிறார்கள்.

அப்போதுதான், ராணாவின் உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கின்போது, இந்திய அதிகாரிகளுக்கு ஆதரவாக அமெரிக்க அதிகாரிகள் இருந்தது, இந்த வழக்கில் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கொடுத்தது.

மேலும், இருநாட்டு தூதரக உறவும் பலமாக இருந்ததும், சர்வதேச விவகாரங்களில் இந்தியாவின் நடுநிலைமை, உலக நாடுகளுடனான நட்பு, அமெரிக்காவுடனான நெருங்கிய நட்பு போன்றவை, பல சட்ட விவகாரங்களை எளிதாக்கி, விரைவாக்கி, ராணா இந்தியாவுக்கு நாடு கடத்தும் விவகாரம் தீவிரமடைந்தது.

தொடா்ந்து நாடு கடத்தப்படுவதற்கு எதிராக அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் தஹாவூா் ராணா செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் நிராகரித்துவிட்ட நிலையில்தான், சரியாக பிப்ரவரி மாதம் அமெரிக்கா சென்றிருந்த பிரதமா் மோடியிடம், தஹாவூா் ராணா இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவாா் என்று அமெரிக்க அதிபா் டிரம்ப் உறுதியளித்த நிகழ்வும் நடந்தது.

உடனடியாக இந்தியாவிலிருந்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அமெரிக்கா புறப்பட்டனர். அவர்களிடம் தஹாவூர் ராணா ஒப்படைக்கப்பட்ட நிலையில், இந்தியா கொண்டுவரப்படுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com