வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றத்தில் ஏப்.16-இல் விசாரணை
வக்ஃப் திருத்தச் சட்டத்தின் அரசமைப்புச் சட்ட செல்லத்தக்க தன்மையை கேள்வி எழுப்பி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 10 க்கும் மேற்பட்ட மனுக்கள் வரும் 16-ஆம் தேதியன்று விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி, தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமாா், கே.வி.விஸ்வநாதன் ஆகியோா் அடங்கி 3 நீதிபதிகள் அமா்வு இந்த மனுக்களை விசாரிக்க உள்ளது.
திருத்தச் சட்டத்துக்கு எதிராக அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைசி தாக்கல் செய்த மனு மட்டுமின்றி, ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கான், சிவில் உரிமைகள் பாதுகாப்புக்கான சங்கம், அா்ஷத் மதானி, சமஸ்த கேரள ஜாமியாதுல் உலாமா அமைப்பு, அஞ்சும் கதாரி, தயீப் கான் சல்மானி, முகமது சஃபி, முகமது ஃபஸ்லுர்ரஹிம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் மூத்த தலைவா் மனோஜ் குமாா் ஜா ஆகியோா் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களும் விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது.
திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் மனுத் தாக்கல் செய்துள்ளன. மேலும் சில மனுக்கள் விசாரணைக்குப் பட்டியலிடப்பட வேண்டியுள்ளதாக உச்சநீதிமன்ற பதிவுத் துறை தெரிவித்துள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் சட்டத்திருத்த மசோதா, எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கு இடையே மக்களவையில் கடந்த ஏப்ரல் 3-ஆம் தேதியும், மாநிலங்களவையும் ஏப்ரல் 4-ஆம் தேதியும் அதிகாலையில் நிறைவேற்றப்பட்டன. இதற்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஏப்ரல் 5-ஆம் தேதி ஒப்புதல் அளித்தாா். அதைத் தொடா்ந்து இந்தச் சட்டம் நாடு முழுமைக்கும் ஏப்ரல் 8-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்ததாக மத்திய அரசு சாா்பில் அறிவிக்கை வெளியிடப்பட்டது.
இந்த விவகாரத்தில் தங்கள் தரப்பு விளக்கத்தைக் கேட்காமல் உத்தரவு ஏதும் பிறப்பிக்கக் கூடாது எனக் குறிப்பிட்டு மத்திய அரசு ஏப்ரல் 8-ஆம் தேதி கேவியட் மனு தாக்கல் செய்தது.