
அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படும் தஹாவூர் ராணா, மும்பை ஆர்துர் சாலை சிறைச்சாலையின் 12வது சிறைக்கூடத்தில் அதாவது மும்பை சிறையில் அஜ்மல் கசாப் அடைக்கப்பட்டிருந்த கூடத்தில் அடைக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
குண்டுகளால் துளைக்க முடியாத வகையில் அமைக்கப்பட்டிருக்கும், அதிக பாதுகாப்பு நிறைந்த 12வது சிறைக்கூடத்தில்தான், பாகிஸ்தான் பயங்கரவாதி அஜ்மல் கசாப், அடைக்கப்பட்டிருந்தார். கடந்த 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட பிறகு, அந்த அறை காலியாகவே வைக்கப்பட்டிருந்தது.
ஆனால், இதுவரை ராணாவை அடைப்பது தொடர்பாக எந்த உத்தரவும் தங்களுக்குப் பிறப்பிக்கப்படவில்லை என்றும், அவர் இங்கு அழைத்து வரப்பட்டதும்தான், அவரை எங்கு அடைப்பது என்பது முடிவு செய்யப்படும் என்று சிறைத் துறை தெரிவிக்கிறது.
இந்த ஆர்துர் சாலை சிறை என்பதுதான் மும்பை மத்திய சிறைச்சாலை. இது கடந்த 1925ஆம் ஆண்டு மூன்று ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட சிறைச்சாலையாகும். இங்கு 1,100 சிறைக் கைதிகளை அடைத்து வைக்க மட்டுமே வசதி இருக்கும் நிலையில், சுமார் 4 ஆயிரம் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதனால், இங்கு மோசமான சுகாதாரமும், கடும் கூட்ட நெரிசலும் காணப்படுவதாக தொடர்ந்து பல புகார்கள் வந்துகொண்டுதான் உள்ளது.
ஆனால், இந்த சிறைச்சாலைக்குள் இருக்கும் 12வது சிறைக்கூடம் மட்டும் மிகவும் பாதுகாப்பானதாக அமைந்திருக்கும். சொல்லப்போனால், இங்குள்ள அனைத்து சிறை அறைகளும் நிரம்பியிருக்காது. கசாப் அடைக்கப்பட்டிருந்தபோது, இங்கு தனியாக சமையல் கூடமும் அமைக்கப்பட்டிருந்தது.
12வது சிறைக் கூடத்தில் தரைதளத்தில் மூன்று சிறை அறைகள் காலியாகத்தான் உள்ளன. அதில் ஒன்றில்தான் ராணா அடைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
யார் இந்த ராணா?
மும்பை தாக்குதலில் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படும் தஹாவூா் ராணாவை (64) இந்தியாவுக்கு நாடு கடத்த தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை அமெரிக்க உச்சநீதிமன்றம் நிராகரித்த நிலையில், அமெரிக்காவிலிருந்து இன்று பிற்பகலில் ராணா இந்தியா அழைத்து வரப்படுகிறார்.
உலகையே உலுக்கிய 2008-ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 170-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத இயக்கம் நடத்திய இந்தத் தாக்குதலில், பாகிஸ்தானை பூா்விகமாக கொண்ட தஹாவூா் ராணா கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
அவர் மீதான குற்றச்சாட்டு என்னவென்றால் லஷ்கா்-ஏ-தொய்பா இயக்கத்துக்கு நிதி உதவி உள்ளிட்ட உதவிகளை செய்து வந்தது நிரூபிக்கப்பட்டதைத் தொடா்ந்து, அவரை குற்றவாளி என்று அமெரிக்க நீதிமன்றம் தீா்ப்பளித்தது. அந்நாட்டின் லாஸ் ஏஞ்சலீஸ் சிறையில் அவா் அடைக்கப்பட்டிருந்தார்.
அவரை இந்தியாவுக்குக் கொண்டு வர மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஆனால் தான்னை இந்திய சிறையில் சித்திரவதை செய்வார்கள் என்று கூறி, நாடு கடத்துவதற்கு எதிராக ராணா தாக்கல் செய்த மனுவை கடந்த ஜன.21-ஆம் தேதி அமெரிக்க உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
இந்த நிலையில்தான், சரியாக பிப்ரவரியில் அமெரிக்கா சென்றிருந்த பிரதமா் மோடியிடம், தஹாவூா் ராணா இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவாா் என்று அமெரிக்க அதிபா் டிரம்ப் உறுதியளித்திருந்தார்.
இதைத்தொடா்ந்து நாடு கடத்தப்படுவதற்கு எதிராக அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் தஹாவூா் ராணா செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் நிராகரித்துவிட்ட நிலையில், இந்தியாவிலிருந்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அமெரிக்கா புறப்பட்டனர். அவர்களிடம் தஹாவூர் ராணா ஒப்படைக்கப்பட்ட நிலையில், இன்று இந்தியா கொண்டுவரப்படுகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.