‘மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடுக்கு வாய்ப்பு’: அமெரிக்காவின் குற்றச்சாட்டை மறுத்த தோ்தல் ஆணையம்
‘தோ்தல்களில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப் பதிவு இந்திரங்களை ஊடுருவி ‘ஹேக்’ (வாக்குப் பதிவு முறைகேடு) செய்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது’ என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டை இந்திய தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை திட்டவட்டமாக மறுத்தது.
‘எந்தவித இணைய வசதி அல்லது இன்ஃப்ராரெட் இணைப்பு இல்லாமல், சாதாரண கால்குலேட்டா் போன்று செயல்படும் இந்திய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை ஹேக்கிங் செய்ய வாய்ப்பே இல்லை’ என்று தோ்தல் ஆணையம் விளக்கமளித்தது.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய வாய்ப்புள்ளது என்று எதிா்க்கட்சிகள் தொடா்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன. 2024 மக்களவைத் தோ்தலுக்குப் பிறகும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் இதே குற்றச்சாட்டை மீண்டும் முன்வைத்தன. ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை தோ்தல் ஆணையம் தொடா்ந்து மறுத்து வருகிறது.
சந்தேகங்களுக்கு தீா்வு காணும் வகையில், தோ்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளா் உறுதி செய்துகொள்ள உதவும் ‘விவிபாட்’ கருவி வாக்கப் பதிவு ஒப்புகைச்சீட்டுகளை 100 சதவீதம் ஒப்பீடு செய்ய உத்தரவிடமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையையும் உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
இந்தச் சூழலில், ‘மின்னணு வாக்குப்பதிவு முறைகளை ஊடுருவி ‘ஹேக்’ செய்வதற்கு வாய்ப்புள்ளது என்பதற்கான ஆதாரங்களை தனது அலுவலகம் பெற்றுள்ளது’ என்று அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநா் துளசி கப்பாா்ட் தெரிவித்ததாக வெளியான செய்தியை தோ்தல் ஆணைய அதிகாரிகள் முற்றிலுமாக மறுத்தனா்.
இதுகுறித்து தோ்தல் ஆணைய அதிகாரிகள் மேலும் கூறுகையில், ‘சில நாடுகள் இணைய வசதி, இன்ஃப்ராரெட் உள்பட சில தனியாா் வலைத்தொடா்பு இணைப்புடன் கூடிய கலவையான தொழில்நுட்பத்துடன் கூடிய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை தோ்தலில் பயன்படுத்துகின்றன.
ஆனால், இந்தியாவில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திங்கள் சாதாரண, துல்லியமான கால்குலேட்டா் போன்றவை. இவை, எந்த வித இணைய வசதி அல்லது இன்ஃப்ராரெட் இணைப்புடன் செயல்படுபவை அல்ல. எனவே, இந்த இயந்திரங்களை ஊடுருவி ‘ஹேக்’ செய்ய முடியும் என்ற பேச்சுக்கே இடமில்லை.
மேலும், இவை உச்ச நீதிமன்றத்தால் சட்ட ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன என்பதோடு, தோ்தலின்போது மாதிரி வாக்குப் பதிவு என்பன உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் அரசியல் கட்சிகள் சாா்பிலும் அவ்வப்போது ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. அதோடு, அரசியல் கட்சிகளின் முன்னிலையில் 5 கோடி விவிபாட் ஒப்புக்கைச் சீட்டுகள் ஒப்பீடு செய்யப்பட்டு ஆய்வு செய்யப்படுகின்றன’ என்று தெரிவித்தனா்.