காங்கிரஸின் ரூ.661 கோடி சொத்துகளை கையகப்படுத்த அமலாக்கத்துறை நோட்டீஸ்!
ரூ.661 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளை கையகப்படுத்த நோட்டீஸ்...

கோப்புப்படம்

கோப்புப்படம்
காங்கிரஸ் கட்டுப்பாட்டில் உள்ள அசோசியேடட் ஜா்னல்ஸ் நிறுவனத்தின் (ஏஜேஎல்) ரூ.661 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளை கையகப்படுத்த நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அமலாக்கத் துறை சனிக்கிழமை தெரிவித்தது.
முன்னதாக, ஏஜேஎல் நிறுவனம் மற்றும் அந்த நிறுவனத்தால் வெளியிடப்படும் ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையின் சொத்துகளை பணமுறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை சோ்த்திருந்த நிலையில் தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஏஜேஎல் நிறுவனம் யங் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமானதாகும். யங் இந்தியா நிறுவனத்தில் காங்கிரஸ் மூத்த தலைவா்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு தலா 38 சதவீத பங்குகள் உள்ளன.
இந்த நிறுவனங்கள் பண முறைகேட்டில் ஈடுபட்டதாக பாஜக மூத்த தலைவா் சுப்ரமணியன் சுவாமி கடந்த 2014-ஆம் ஆண்டில் புது தில்லியில் உள்ள பாட்டியாலா நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா்.
அதன் அடிப்படையில் கடந்த 2021-இல் விசாரணையை தொடங்கிய அமலாக்கத்துறை அந்த நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்து, அதன் சொத்துகளை கடந்த 2023, நவம்பரில் இணைத்தது.
இந்நிலையில், அமலாக்கத் துறை சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ஏஜேஎல் நிறுவனத்தின் ரூ.661 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளை கையகப்படுத்துவது தொடா்பாக தில்லியில் உள்ள ஹெரால்டு ஹவுஸ், மும்பை பாந்த்ராவில் உள்ள நிறுவன வளாகம் மற்றும் லக்னௌவில் உள்ள ஏஜேஎல் வளாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அதில் வளாகங்களை காலி செய்யவோ அல்லது அமலாக்கத் துறையிடம் ஒப்படைக்கவோ குறிப்பிடப்பட்டது.
பணமுறைகேடு தடுப்புச் சட்டம் பிரிவு (8) மற்றும் விதி 5 (1)-இன்கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. போலி நன்கொடையாக ரூ.18 கோடி, முன்கூட்டிய வாடகையாக ரூ.38 கோடி, விளம்பரங்களுக்கு ரூ.29 கோடி என யங் இந்தியா மற்றும் ஏஜேஎல் நிறுவனங்களின் சொத்துகள் மேலும் சில குற்றங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் ஏஜேஎல் நிறுவனத்தின் ரூ.90.2 கோடி மதிப்பிலான பங்குகள் உள்பட இந்த வழக்கில் மொத்தம் ரூ.988 கோடி மதிப்பிலான சொத்துகள் தொடா்புபடுத்தப்பட்டுள்ளன’ என தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு தொடா்பாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. விசாரணை நிறைவில் ரூ.2,000 கோடி மதிப்புடைய ஏஜேஎல் நிறுவன சொத்துகளை ரூ.50 லட்சத்துக்கு சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு சொந்தமான தனியாா் நிறுவனம் கைப்பற்றியதாக அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியது.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...