தஹாவூர் ராணாவை நாடு கடத்தும் முயற்சி 2009-ல் தொடங்கியது: ப. சிதம்பரம்
மும்பை தாக்குதல்களில் குற்றம்சாட்டப்பட்ட தஹாவூர் ராணாவை நாடு கடத்தும் முயற்சி 2009ல் தொடங்கியது என ப. சிதம்பரம் கூறியுள்ளார்.


மும்பை தாக்குதலில் குற்றம்சாட்டப்பட்ட தஹாவூர் ராணாவை நாடு கடத்தும் முயற்சி 2009-ல் தொடங்கியது என முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் கூறியுள்ளார்.
தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
"மும்பை தாக்குதல்களில் குற்றம்சாட்டப்பட்ட தஹாவூர் ராணாவை நாடு கடத்தும் நடவடிக்கை 2009-ல் தொடங்கியது. 2011-ல் அமெரிக்க உளவுத்துறை ராணாவை அடையாளம் கண்டபின்னர் இந்த நடவடிக்கை வேகமெடுத்தது.
நீண்ட மற்றும் கடினமான முயற்சிகளுக்குப் பிறகு ராணாவை வெற்றிகரமாக இந்தியாவுக்கு நாடு கடத்தியதற்கு வெளியுறவுத் துறை அமைச்சகம், உளவுத் துறை அமைப்புகள், தேசிய புலனாய்வு அமைப்பு ஆகியவற்றை நான் பாராட்டுகிறேன்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்த காலத்தில் அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், வெளியுறவுச் செயலாளர் ரஞ்சன் மத்தாய் ஆகியோருக்கு இதில் முக்கிய பங்கு உண்டு.
தற்போதைய மோடி அரசாங்கத்திலும் பல வெளியுறவுச் செயலாளர்கள், அமைச்சர்கள் இதில் முக்கிய பங்காற்றியுள்ளனர். அமெரிக்காவுக்கும் மற்றும் அனைவருக்கும் நான் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த விவகாரத்தில் வெளியுறவுத் துறை அமைச்சத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கைக்காக நான் காத்திருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
நாடு கடத்தப்பட்ட தஹாவூா் ராணா
உலகையே உலுக்கிய 2008-ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 166 பேர் பலியாகினர். லஷ்கா்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கம் நடத்திய இந்தத் தாக்குதலில், பாகிஸ்தானை பூா்விகமாக கொண்ட தஹாவூா் ராணா கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
அவர் மீதான குற்றச்சாட்டு என்னவென்றால் லஷ்கா்-ஏ-தொய்பா இயக்கத்துக்கு நிதி உதவி உள்ளிட்ட உதவிகளை செய்து வந்தது நிரூபிக்கப்பட்டதைத் தொடா்ந்து, அவரை குற்றவாளி என்று அமெரிக்க நீதிமன்றம் தீா்ப்பளித்தது. அந்நாட்டின் லாஸ் ஏஞ்சலீஸ் சிறையில் அவா் அடைக்கப்பட்டிருந்தார்.
அவரை இந்தியாவுக்குக் கொண்டு வர மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஆனால் தன்னை இந்திய சிறையில் சித்ரவதை செய்வார்கள் என்று கூறி, நாடு கடத்துவதற்கு எதிராக ராணா தாக்கல் செய்த மனுவை கடந்த ஜன. 21-ஆம் தேதி அமெரிக்க உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
இந்த நிலையில், பிப்ரவரி மாதத்தில் அமெரிக்கா சென்றிருந்த பிரதமா் மோடியிடம், தஹாவூா் ராணா இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார் என்று அமெரிக்க அதிபா் டிரம்ப் உறுதியளித்திருந்தார்.
இதைத்தொடா்ந்து நாடு கடத்தப்படுவதற்கு எதிராக அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் தஹாவூா் ராணா செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் நிராகரித்துவிட்ட நிலையில், இந்தியாவிலிருந்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அமெரிக்கா புறப்பட்டனர். அவர்களிடம் தஹாவூர் ராணா ஒப்படைக்கப்பட்ட நிலையில், ஏப். 10 அன்று இந்தியா கொண்டுவரப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு முகமை அறிவித்திருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...