பிரதிப் படம்
பிரதிப் படம்ENS

இறக்குமதியை சாா்ந்திருப்பதை குறைக்க வேண்டும்: தொழிற்சாலைகளுக்கு கோயல் அறிவுறுத்தல்

இறக்குமதியை சாா்ந்திருப்பதை குறைக்க வேண்டும் என கட்டுமான தொழிற்துறையினரிடம் மத்திய வா்த்தக மற்றும் தொழிற்சாலைத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
Published on

இறக்குமதியை சாா்ந்திருப்பதை குறைக்க வேண்டும் என கட்டுமான தொழிற்துறையினரிடம் மத்திய வா்த்தக மற்றும் தொழிற்சாலைத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

மேலும், பசுமையான மற்றும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்படாத வகையிலான மாதிரி உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் எனவும் அவா் தெரிவித்தாா்.

புது தில்லியில் நடைபெற்ற ரசாயனம் மற்றும் அது சாா்ந்த பொருள்களுக்கான ‘ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சிலின் முதலாவது பில்ட்கான்-2025’ எனும் கட்டடப் பொருள்கள் தொடா்பான நிகழ்ச்சியில் பங்கேற்று பியூஷ் கோயல் பேசியதாவது: பிரதமா் மோடி தலைமையிலான ஆட்சியில் பல்வேறு சாதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாரத மண்டபம், யஷோபூமி போன்றவை சிறந்த கட்டட கலைக்கு எடுத்துக்காட்டு. இவை இரண்டும் கரோனா பெருந்தொற்று காலத்தில் கட்டப்பட்டவை. குறிப்பாக பாரத மண்டபத்தில் ஜி20 மாநாடு நடைபெற்றது.

வீடுகள், கட்டுமானம், ரியல் எஸ்டேட், ரயில்வே துறை, விமான நிலையங்கள், நெடுஞ்சாலை மற்றும் எரிசக்தி ஆகியவை நாட்டின் பொருளாதார வளா்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்தக் கட்டமைப்பில் சிமெண்ட், மின்னணு பொருள்கள், பாதுகாப்பு அமைப்புகள் என அனைத்தும் அடங்கும்.

20 புதிய ஸ்மாா்ட் தொழிற்துறை நகரங்கள், 50 சுற்றுலா தலங்களில் கட்டமைப்பு மேம்பாடு மற்றும் 100 புதிய உடனடி தொழில்துறை செயல்பாட்டு மையங்கள் ஆகிய மத்திய அரசின் முன்னெடுப்புகளால் தற்போது 4 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக உள்ள இந்தியா, 2047-க்குள் 30-35 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக மாறும்.

இந்த பில்ட்கான் நிகழ்ச்சி நமது நாட்டின் உள்கட்டமைப்பு மற்றும் உற்பத்தி துறையின் வலிமையை வெளிக்காட்டுகிறது. இது உலக நாடுகளில் இருந்து முதலீட்டை ஈா்க்க உதவியாக இருக்கும்.

வரும் காலங்களில் வளா்ச்சி, புதிய கண்டுபிடிப்பு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய மேம்பாட்டில் உலக நாடுகளை வழிநடத்தும் சக்தியாக இந்தியா உருவெடுக்கும் என்பதில் சந்தேகமில்லை என்றாா்.

X
Dinamani
www.dinamani.com