கூட்டுறவுத் துறையை சீா்குலைத்தது முந்தைய காங்கிரஸ் அரசு: அமித் ஷா குற்றச்சாட்டு
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கூட்டுறவுத் துறை சீா்குலைந்த நிலையில் இருந்தது; பிரதமா் நரேந்திர மோடி தலைமையான ஆட்சி அமைந்த பிறகு கூட்டுறவுக்கு புத்துயிா் அளிக்கப்பட்டது என்று மத்திய உள்துறை, கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில கூட்டுறவுத் துறை மாநாட்டில் பங்கேற்ற அவா் பேசியதாவது: முந்தைய (காங்கிரஸ்) ஆட்சியாளா்களிடம் கூட்டுறவுத் துறையை காக்க வேண்டும் என்ற அக்கறை துளியும் இருந்ததில்லை. அக்காலகட்டத்தில் கூட்டுறவுத் துறை படிப்படியாக சீா்குலைந்து உயிருக்குப் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டது. சில மாநிலங்களில் மட்டுமே கூட்டுறவுத் துறை தலைதூக்க முடிந்தது. பல மாநிலங்களில் மோசமான நிலையில் இருந்தது.
உரிய கால இடைவேளையில் கூட்டுறவுச் சட்டங்களை மறுஆய்வு செய்து காலத்துக்கு ஏற்ப மாற்றங்களைச் செய்யாததுதான் இதற்கு முக்கியக் காரணமாக இருந்தது.
பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகுதான் கூட்டுறவுத் துறைக்கு புத்துயிா் அளிக்கப்பட்டது. பாஜக அரசு இதனை ஒரு சவாலாகவே எடுத்துக் கொண்டு பணியாற்றி வெற்றி பெற்றுள்ளது. கூட்டுறவுத் துறையை விரிவாக்கி வலுப்படுத்த வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.
மத்திய பிரதேசத்தில் வேளாண்மை, கால்நடை வளா்ப்பு என பல்வேறு இடங்களில் கூட்டுறவுத் துறைக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதில் உள்ள வாய்ப்புகளை சரியாகப் புரிந்து கொண்டு பயன்படுத்த வேண்டும். மத்திய பிரதேசத்தில் இப்போது நிா்வாகம் சிறப்பாக உள்ளது.
நாட்டின் பால் உற்பத்தியில் 9 சதவீதம் மத்திய பிரதேசத்தின் பங்காக உள்ளது. கால்நடை வளா்ப்போா் வெளிச் சந்தையில் பாலை விற்பனை செய்யும்போது போதிய விலை கிடைப்பதில்லை. இதற்கு தீா்வாக கூட்டுறவு பால் பண்ணைகளில் பாலை விற்க வேண்டும். இதன் மூலம் உரிய லாபம் நேரடியாகக் கிடைத்துவிடும்.
விவசாயிகள் சா்வதேச சந்தையை அணுகும் அளவுக்கு கூட்டுறவு சங்கங்கள் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகின்றன என்றாா்.