ஒடிசா முன்னாள் முதல்வர் பிஜு பட்நாயக் சிலை இன்று தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.
ஒடிசாவின் பாட்நகர் பகுதியில் முன்னாள் முதல்வர் பிஜு பட்நாயக் சிலை அமைந்துள்ளது. இந்தச் சிலையை பாட்நகர் முன்னாள் எம்.எல்.ஏ சரோஜ் குமார் மெஹெர் அவரது பதவிக்காலத்தின்போது திறந்துவைத்தார்.
இந்தச் சிலையை இன்று (ஏப். 15) காலை 6 மணியளவில் மர்மநபர் ஒருவர் தீ வைத்து எரித்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, பாட்நகர் போலீஸார் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்தனர். இதுதொடர்பான விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவின.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஜுகல் கிஷோர் சாஹு என்ற நபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்தது. மேலும், இதில் அரசியல் காரணங்கள் எதுவுமில்லை என்றும் மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்திற்கு பிஜு ஜனதா தள கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், பிஜு பட்நாயக்கை அவமதித்த பாஜக அரசுக்கு எதிராக பல இடங்களில் போராட்டம் நடத்தவுள்ளதாகவும் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சிலை முதன்முதலில் நிறுவப்பட்ட நாள் முதல் இங்கு சர்ச்சைகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த இடத்தில் பரசுராமர் சிலை நிறுவப்பட வேண்டுமென்று ஆரம்பத்தில் பிராமின் சமாஜ் அமைப்பினர் இதற்கு எதிராகப் போராட்டம் நடத்தினர்.
இந்தச் சிலை அரசு சார்பில் நிறுவப்படவில்லை என்று அப்போதைய நிர்வாக அதிகாரி தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, பிராமின் சமாஜைச் சேர்ந்தவர்கள் ஒரு மாத காலம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக வழக்குத் தொடரப்பட்டு சிலையை பாலிதீன் கவரால் மூடி வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.