இந்திய காவல்துறையில் 90% பெண் காவலர்கள் ஜூனியர் பதவிகளில் மட்டுமே இருப்பதாகவும் , பெண்களுக்கான பிரதிநிதித்துவம் குறைவான அளவிலேயே இருப்பதாகவும் இந்திய நீதி அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
டாடா அறக்கட்டளை, சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தரவு சேகரிப்பு நிறுவனங்கள் இணைந்து இந்திய மாநிலங்களில் காவல்துறை, நீதித்துறை, சிறைத்துறை, சட்ட உதவி ஆகிய துறைகளின் செயல்திறனைக் கண்காணித்து 2025 ஆம் ஆண்டுக்கான ‘இந்திய நீதி அறிக்கையை’ (ஐஜேகே) வெளியிட்டுள்ளனர்.
இந்த அறிக்கையின்படி, சட்ட அமலாக்கத்தில் பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வந்தாலும் ஒரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் கூட காவல்துறையில் பெண்களின் பிரதிநிதித்துவத்திற்கான இலக்கு அடையப்படவில்லை என்று தெரிய வந்துள்ளது.
ஐஜேஆர் 2025 அறிக்கையின்படி, விரைவாக நீதி வழங்குவதில் கர்நாடக மாநிலம் தொடர்ந்து 4-வது ஆண்டாக முதலிடத்தில் இருந்து வருகின்றது.
கர்நாடகத்தைத் தொடர்ந்து ஆந்திரம், தெலங்கானா, கேரளம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் மற்ற மாநிலங்களைவிட சிறந்த பன்முகத்தன்மை, உள்கட்டமைப்பு, பணியாளர் நியமனத்தில் சிறந்து விளங்குவதாக இந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
காவல்துறையும் பெண்கள் பிரதிநிதித்துவமும்
இந்தியாவில் காவல்துறை பதவிகளில் பாலின பாகுபாடு பற்றி இந்த அறிக்கையில் முக்கியமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில், மொத்தமுள்ள 2.4 லட்சம் பெண் காவலர்களில் வெறும் 960 பேர் மட்டுமே ஐபிஎஸ் அதிகாரிகளாக இருப்பதும் 24,322 பேர் ஐபிஎஸ் அல்லாத துணை கண்காணிப்பாளர், ஆய்வாளர், துணை ஆய்வாளர் பதவிகளில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்திய அளவில் மொத்தம் 5,047 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியாற்றி வரும் நிலையில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் அதில் மிகவும் குறைவாகவே உள்ளது.
மேலும், 2.17 லட்சம் பெண் காவலர்கள் கான்ஸ்டபிள் தர பதவிகளில் மட்டுமே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பதவியில் பெண்களின் எண்ணிக்கை அதிகபட்சமாக 133 வரை உள்ளது.
அதேபோல, காவல்துறையில் எஸ்சி, எஸ்டி பிரதிநிதித்துவமும் குறைந்து 17%, 12% என்ற அளவிலேயே உள்ளன.
தற்போது, 78% காவல் நிலையங்களில் மகளிர் உதவி மையங்கள் உள்ளன. 86% சிறைகளில் விடியோ கான்ஃபரன்ஸ் வசதி உள்ளது. 2019 முதல் 2023 வரையான காலகட்டத்தில் தனிநபர் சட்ட உதவிக்கான செலவு இருமடங்காக உயர்ந்து ரூ. 6.46 -ஐ எட்டியுள்ளது.
நீதித்துறையும் பற்றாக்குறையும்
நீதித்துறையில் உள்கட்டமைப்பு, பணியாளர்கள் பற்றாக்குறை பற்றி இந்த அறிக்கை தீவிரமாகச் சுட்டிக்காட்டியுள்ளது.
மாவட்ட நீதித்துறையில் பெண்களின் பங்களிப்பு 38% ஆக உயர்ந்துள்ளது. ஆனால், அதில் பழங்குடியினர் (எஸ்டி), பட்டியலினத்தைச் (எஸ்சி) சேர்ந்த பெண்களின் பங்கு 5% மற்றும் 14% அளவிலேயே உள்ளன.
அதேநேரம், இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு 15 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். ஆனால், 1987-ம் ஆண்டு சட்ட ஆணைய பரிந்துரையின்படி 50 பேர் வரை இருக்கவேண்டும்.
உயர்நீதிமன்றங்கள் 33% பணியாளர் பற்றாக்குறையுடனும் மாவட்ட நீதிமன்றங்கள் 21% பணியாளர் பற்றாக்குறையுடனும் இயங்கி வருகின்றன.
இதனால், அலகாபாத் மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற பகுதிகளில் உள்ள உயர் நீதிமன்றங்களில் ஒரு நீதிபதி 15,000 வழக்குகளைக் கவனிக்க வேண்டிய பணிச்சுமை உருவாகின்றது. மாவட்ட நீதிபதிகள் சராசரியாக 2,200 வழக்குகள் வரை கவனிக்க வேண்டியுள்ளது.
வசதியற்ற சிறைகள்
சிறைகளில் கைதிகள் எண்ணிக்கை அதிகமாக இருப்பது கவனத்தில் கொண்டு வரவேண்டிய பிரச்னையாக உள்ளது. தற்போது நாடு முழுவதும் சிறைக் கைதிகள் எண்ணிக்கை சராசரியாக 131% என்ற அளவில் உள்ளது.
அதேபோல, 300 சிறைக் கைதிகளுக்கு 1 மருத்துவர் இருக்கவேண்டிய நிலையில் 775 கைதிகளுக்கு 1 மருத்துவர் மட்டுமே உள்ளனர்.
இதில் ஹரியாணா, மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 1000 கைதிகளுக்கு 1 மருத்துவர் மட்டுமே இருப்பதாக அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
மேலும், இந்திய சிறைகளில் மொத்தமாக 25 உளவியல் / மனநல மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர்.
இந்திய சிறைக்கைதிகளின் எண்ணிக்கை வருகிற 2030 ஆம் ஆண்டுக்குள் 6.8 லட்சமாக உயரும் என்று எச்சரிக்கப்படும் நிலையில், இதன் பராமரிப்புகளுக்கு உரிய முன்னுரிமை அளிக்கப்படாவிட்டால் அது பாதிக்கப்படும் மக்களுக்கு பெரிய சுமையை ஏற்படுத்தும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் சட்ட உதவியை நாடுவதற்கான சட்டப்பூர்வ தன்னார்வலர்கள் (பிஎல்வி) எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் 38% குறைந்துள்ளது. மக்கள்தொகையில் 1 லட்சம் பேருக்கு 3 சட்டப்பூர்வ தன்னார்வலர்கள் மட்டுமே தற்போது உள்ளனர்.
25 மாநிலங்களில் மனித உரிமைகள் ஆணையம் செயல்பாடுகள் பற்றி மதிப்பீடு நடத்தி மாற்றுத்திறனாளிகளுக்கான நீதி, தகராறுகளில் சமாதான நடவடிக்கைகளை மேற்கொள்வது பற்றி இந்த அறிக்கையில் கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன.
தேசிய குற்ற ஆவணக் காப்பகம், சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம். தேசிய நீதித்துறை தரவு முகமை, சிறைத்துறை புள்ளிவிவரங்கள் ஆகியவற்றின் தரவுகளைக் கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.