தில்லியில் 3 நாள்கள் தங்கினாலே தொற்று ஏற்பட்டுவிடும்! - அமைச்சர் நிதின் கட்கரி பேச்சு

தில்லி காற்று மாசு பற்றி மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேச்சு...
Nitin Gadkari
ENS
Published on
Updated on
1 min read

தில்லியில் 3 நாள்கள் தங்கினால தொற்று ஏற்பட்டுவிடும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

தில்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக பல சுகாதார அமைப்புகள் எச்சரிக்கை விடுத்து வரும் நிலையில், சமீபத்தில் வெளியிடப்பட்ட காற்று தரக் குறியீடு அறிக்கையில், 'தில்லியில் இருப்பவர்களின் ஆயுள்காலம் 10 ஆண்டுகள் குறைந்துவிடும்' என்று கூறப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல், இந்தியாவின் மிக முக்கிய சுகாதார எச்சரிக்கை என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை மேற்கோள் காட்டி மும்பையில் நடந்த நிகழ்வொன்றில் பேசிய அமைச்சர் நிதின் கட்கரி,

"தில்லி நகரில் சிறிது நேரம் தங்குவதுகூட சுகாதாரச் சிக்கல்களை ஏற்படுத்தும். தில்லியில் மூன்று நாள்கள் தங்கினாலே தொற்றுகள் ஏற்பட்டுவிடும். தில்லி, மும்பை என இரண்டு நகரங்களும் மாசுபாட்டிற்கான சிவப்பு எச்சரிக்கையில் உள்ளன. எனவே, சுற்றுச்சூழலுக்கு நாம் உடனடியாக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

சுற்றுச்சூழல் பிரச்னையை நாம் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை. பொருளாதாரம், உள்கட்டமைப்புக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை சுற்றுச்சூழலுக்கும் அளிக்க வேண்டும்.

கடந்த ஆண்டு டிசம்பரில், காற்று மாசு அளவு அதிகரித்ததால் தில்லிக்குச் செல்லவே எனக்கு விருப்பமில்லை. ஏனெனில் தில்லிக்குச் செல்லும்போதெல்லாம் எனக்கு தொற்றுகள் ஏற்படும். எனவே ஒவ்வொரு முறை அங்கு செல்லும்போதும் செல்ல வேண்டுமா என யோசிப்பேன்" என்று கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், "நாம் கிட்டத்தட்ட ரூ. 22 லட்சம் கோடி மதிப்புள்ள புதைபடிவ எரிபொருள்களை இறக்குமதி செய்கிறோம். காற்று மாசுபாட்டிற்கு பெட்ரோல், டீசல்தான் முக்கிய காரணங்களாக இருக்கின்றன. போக்குவரத்து நெரிசல்களை சரிசெய்ய வேண்டும். வாகனங்களில் பயன்படுத்தப்படும் எரிபொருளுக்கு மாற்றம் தேவை. புதைபடிவ எரிபொருள்கள்களுக்கு ரூ. 22 லட்சம் கோடி செலவு செய்வதற்குப் பதிலாக விவசாயிகளுக்கு ரூ. 10-12 லட்சம் கொடுக்க விரும்புகிறேன்.

இந்தியா, 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை அடைவதற்கு போக்குவரத்து, மின்சாரம், நீர், தகவல் தொடர்புத் துறைகளில் உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை உருவாக்குவதைச் சார்ந்துள்ளது. தளவாடச் செலவுகளைக் குறைப்பதற்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

சீனாவின் தளவாடச் செலவு 8 சதவீதம், அமெரிக்கா மற்றும் ஐரோப்பா தலா 12 சதவீதம். ஆனால் நம்முடைய செலவு 14-16 சதவீதம். அதை ஒற்றை இலக்கமாகக் குறைக்க விரும்புகிறோம். அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் தளவாடச் செலவுகள் 16 சதவீதத்திலிருந்து 9 சதவீதமாகக் குறையும்" என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com