
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை நடத்திய கொடூர துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 2 வெளிநாட்டினர் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர், அதற்குப் பொறுப்பான பயங்கரவாதிகளைக் கண்டறிய பாதுகாப்புப் படையினர் புதன்கிழமை தீவிர தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 2019-ஆம் ஆண்டு, புல்வாமாவில் 47 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்த தற்கொலைப் படை தாக்குதலுக்குப் பிறகு காஷ்மீரில் நடந்த மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல் இதுவாகும்.
ஜம்மு-காஷ்மீரின் பிரபல சுற்றுலா நகரமான பஹல்காமில் இருந்து சுமார் 6 கி.மீ. தூரத்தில் உள்ள "சிறிய ஸ்விட்சர்லாந்து' என்று அழைக்கப்படும் பைசாரன் பள்ளத்தாக்கின் புகழ்பெற்ற துலியன் ஏரியின் அடிவார முகாமான பைசாரனில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் செவ்வாய்க்கிழமை கூடியிருந்தபோது, பைசாரன் மலையிலிருந்து புல்வெளி பகுதிக்குள் திடீரென நுழைந்த பயங்கரவாதிகள், அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கொடூர தாக்குதலை நடத்தினர்.
தாக்குதலில் 2 வெளிநாட்டவர்கள் உள்பட 26 பேர் பலியாகினர், பலர் காயமடைந்தனர். இவர்களில் 22 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தாக்குதல் குறித்த தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ராணுவம், சிஆர்பிஎஃப் வீரர்கள் மற்றும் காவல் துறையினர் ஹெலிகாப்டர் உதவியுடன் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டனர். உள்ளூர் மக்களும் காயமடைந்தவர்களில் சிலரை தங்கள் குதிரைகளில் ஏற்றி பஹல்காம் நகருக்கு அழைத்து வந்தனர். நிவாரணப் பணிகளில் மாவட்ட நிர்வாகமும் ஈடுபட்டுள்ளது.
தீவிர தேடுதல் நடவடிக்கை
இந்த நிலையில், பயங்கரவாதிகள் ஜம்முவின் கிஷ்த்வாரில் எல்லை கடந்து, கோகர்நாக் வழியாக பைசாரனுக்கு வந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவிக்கும் நிலையில் பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பான "தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்' அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகளைக் கண்டறிய பாதுகாப்புப் படையினர் புதன்கிழமை தீவிர தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
பலத்த பாதுகாப்பு
தாக்குதலுக்குப் பிறகு பெஹல்காமில் உள்ள சுற்றுலாப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது, எப்போதும் பரபரப்பாக காணப்படும் சுற்றுலாப் பகுதிகளின் தெருக்கள் ஆள்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பல அமைப்புகள் பந்த் அழைப்பு விடுத்துள்ளன.
சொந்த ஊர்களுக்கு திரும்பும் சுற்றுலாப் பயணிகள்
இந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவுவதால், சுற்றுலாப் பயணிகள் தங்கள் பயணங்களையும் தவிர்த்து சொந்த ஊர்களுக்கு திரும்ப முடிவு செய்துள்ளனர்.
சுற்றுலாப் பயணிகளில் ஒருவரான தில்லியைச் சேர்ந்த சமீர் பரத்வாஜ், "நாங்கள் கடந்த மூன்று நாள்களாக காஷ்மீரில் இருந்து வருகிறோம். பெஹல்காமில் உள்ள இடங்களைப் பார்வையிட திட்டமிட்டிருந்தோம். ஆனால் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு அங்கு நிலைமை சரியில்லாததால், நாங்கள் தில்லிக்குச் செல்கிறோம். இங்கு நடந்த தாக்குதல் மிகவும் கொடூரமானது. பெஹல்காமில் முதல் முறையாக இதுபோன்ற கொடூரமான தாக்குதல் நடந்துள்ளது," என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.