
பெஹல்காம் தாக்குதலையடுத்து பாகிஸ்தான் மீது இந்தியா கடும் நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில், பதிலுக்கு இந்தியா மீதும் பாகிஸ்தான் சில நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
இந்தியாவுடனான அனைத்து வகை வர்த்தகங்களையும் நிறுத்த பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. மேலும், பாகிஸ்தானின் வான்வெளியைப் பயன்படுத்த இந்திய விமானங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து, இந்தியாவுடன் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கும் உரிமையைப் பயன்படுத்தவும் முடிவு செய்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தில் அதிகாரிகளின் எண்ணிக்கை 30-ஆக குறைக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கு சார்க் நாடுகள் விசா வழங்குவதையும் நிறுத்த பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் பிரபல சுற்றுலா நகரமான பெஹல்காமில் பயங்கரவாதிகளால் செவ்வாய்க்கிழமை 26 சுற்றுலாப் பயணிகள் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு ’லஷ்கர்-ஏ-தொய்பா’ பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான ’தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்’ பொறுப்பேற்றுள்ளது.
இந்த நிலையில், இந்தத் தீவிரவாதத் தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், மத்திய அரசு வெளியிட்ட தாக்குதல் நடத்தியவர்களின் மாதிரி ஓவியங்களைச் சுட்டிக்காட்டி, அவர்கள் மூவரும் பாகிஸ்தானியர்கள்போல் உள்ளதாக பல்வேறு தரப்பினர் கூறுகின்றனர்.
இதனிடையே, அட்டாரி - வாகா எல்லையை மூடவும், பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் வெளியேறவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், முப்படைகளும் தயார் நிலையில் இருக்கவும் முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, பயங்கரவாதிகள் குறித்து தகவல் அளிப்போருக்கு ரூ. 20 லட்சம் சன்மானம் அளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
இதனிடையே, பாகிஸ்தான் மீதான நடவடிக்கைகள் குறித்து வெளிநாட்டு தூதரகர்களிடம் மத்திய அரசு விளக்கமளிக்க உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.