
பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை ஏவுகணை சோதனைக்கு திட்டமிட்டிருப்பதால் எல்லையில் போர்ப் பதற்றம் நிலவுகிறது.
இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சகத்தின் அலுவலகத்தில் உள்துறை செயலாளர், உளவுத் துறை இயக்குநர், ரா அமைப்பின் தலைவர் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஜம்மு - காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் படுகொலை செய்யப்பட்டனர். மேலும், 20 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் நாட்டில் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அட்டாரி - வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியா்கள் இந்தியாவுக்கு பயணிக்க தடை போன்ற அதிரடி அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டது.
மேலும், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற முப்படை தளபதிகளின் கூட்டத்தில், தயார் நிலையில் இருக்கவும், உச்சகட்ட கண்காணிப்பில் ஈடுபடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கராச்சி கடலோரப் பகுதியில் இன்றும் நாளையும் தரையில் இருந்து இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டிருப்பதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் நடவடிக்கைகளை நாட்டின் அனைத்து அமைப்புகளும் உற்று கவனித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாகிஸ்தானின் போர் விமானங்களை எல்லையில் நிலைநிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக வெளியான தகவலை தொடர்ந்து போர்ப் பதற்றம் எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.