கட்டணம், பயண நேரம் அதிகரிப்பு! பாகிஸ்தான் வான்வெளி தடையால் இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

பாகிஸ்தான் வான்வெளி தடையால் இந்தியாவுக்கு ஏற்படும் பாதிப்பு பற்றி...
கோப்புப்படம்
கோப்புப்படம் ANI
Published on
Updated on
1 min read

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியில் நுழையத் தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், கட்டண உயர்வு அதிகரிக்கும் அபாயம் எழுந்துள்ளது.

மேலும், வட மாநிலங்களில் இருந்து செல்லும் சர்வதேச விமானப் பயணத்தில் நேரம் இரண்டு மணிநேரத்துக்கு மேல் அதிகரிக்கும் சூழலும் நிலவுகிறது.

ஜம்மு - காஷ்மீர் பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக இந்தியா அறிவித்தது.

மேலும், தூதரக ரீதியில் பாகிஸ்தானுக்கு பல்வேறு தடைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிம்லா போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்த பாகிஸ்தான், இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளிக்குள் நுழையத் தடை விதித்து வியாழக்கிழமை மாலை அறிவித்தது.

இதையடுத்து, மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா உள்ளிட்ட பகுதிகளுக்கு வட மாநிலங்களில் இருந்து இயக்கப்படும் விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விமான கட்டணம் உயர்வு!

இந்த நிலையில், தில்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து வட அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் மாற்றுப் பாதையில் இயக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பாகிஸ்தான் வான்வெளியைத் தவிர்ப்பதற்கு அரபிக் கடலுக்கு மேல் நீண்ட தொலைவுக்கு சுற்றுச் செல்ல வேண்டிய சூழல் நிலவுகிறது.

பல நூறு கிலோ மீட்டர் சுற்றி மாற்றுப் பாதையில் செல்ல வேண்டிய சூழல் நிலவுவதால், விமானங்களின் கட்டணம் 8 முதல் 12 சதவிகிதம் வரை அதிகரிக்கக் கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், பயண தூரம் அதிகரிக்கும் சூழலில் விமானத்தின் எரிபொருள் அதிகளவில் நிரப்ப வேண்டியது அவசியமாகிறது. இதன்காரணமாக பயணிகள் எண்ணிக்கை, பயணிகளின் சுமை போன்றவற்றை குறைக்க வேண்டிய சூழல் நிலவும்.

இதனால், ஏற்படும் செலவீனங்களை ஈடுசெய்யும் வகையில் விமானத்தின் கட்டணம் அதிகரிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

அதேபோல், சென்றுசேரும் இடத்துக்கு ஏற்ப பயண நேரமும் 2 முதல் 3 மணிநேரம் அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட மற்றும் இந்திய நிறுவனங்களால் இயக்கப்படும் விமானங்கள் மட்டுமே பாகிஸ்தான் வான்வெளி தடத்தை பயன்படுத்த முடியாது.

அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட பிற நாடுகளில் இருந்து அந்த நாட்டுக்கு சொந்தமான அரசு அல்லது தனியார் விமான நிறுவனங்களால் இந்தியாவுக்கு இயக்கப்படும் விமானங்களுக்கு தடை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய விமான நிறுவனங்களுக்கு பாகிஸ்தான் அரசு வான்வெளி தடை விதிப்பது இது முதல்முறை அல்ல. முன்னதாகவும் இதுபோன்ற வான்வெளித் தடை விதிக்கப்பட்டுள்ளது.

புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பிப்ரவரி 2019 இல், இந்திய விமானப்படை பாகிஸ்தானின் பாலகோட்டில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இதைத் தொடர்ந்து, இந்திய விமானங்கள் தனது வான்வெளியைப் பயன்படுத்த சில மாதங்களுக்கு பாகிஸ்தான் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com