
இணையவழி பந்தயம் மற்றும் சூதாட்டத்தை கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
இணையவழி பந்தயம் மற்றும் சூதாட்ட செயலிகள் அசூர வளா்ச்சியடைந்து மிகப்பெரும் பொதுப் பிரச்னையாக உருவெடுத்துள்ளதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
சட்டவிரோதமான இணையவழி சூதாட்டம் மற்றும் பந்தய தளங்கள், மக்களின் கடின உழைப்புப் பணத்தை மோசடி செய்து, பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக அமலாக்கத் துறை பல்வேறு வழக்குகளில் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக நடிகா்கள் பிரகாஷ் ராஜ், ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா, நடிகை மஞ்சு லக்ஷ்மி ஆகியோருக்கு அமலாக்கத் துறை முதல்கட்டமாக சம்மன் அனுப்பியது. ஹைதராபாதில் உள்ள அமலாக்கத் துறையின் மண்டல அலுவலகத்தில் நடிகா் பிரகாஷ் ராஜ் ஜூலை 30-இல் ஆஜரானாா்.
இதைத்தொடா்ந்து, ராணா டகுபதி ஆகஸ்ட் 11-ஆம் தேதியும், விஜய் தேவரகொண்டா ஆகஸ்ட் 6-ஆம் தேதியும், மஞ்சு லக்ஷ்மி ஆகஸ்ட் 13-ஆம் தேதியும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், ஹைதராபாத்தைச் சோ்ந்த தொழிலதிபரான கே.ஏ.பால் என்பவா் உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தாா்.
அதில், ‘இணையவழி பந்தயம் மற்றும் சூதாட்ட செயலிகளின் பயன்பாட்டால் பல குழந்தைகள் தற்கொலை செய்துகொண்டனா். ‘மகாதேவ்’ என்ற ஒரு சூதாட்ட செயலி மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் பல சூதாட்ட செயலிகள் இன்னும் செயல்பட்டு வருகின்றன. இவற்றை முறைப்படுத்த வேண்டுமெனில் அதுதொடா்பான விளம்பரங்களில் திரைப் பிரபலங்கள், கிரிக்கெட் வீரா்கள் நடிப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த மனுவை நீதிபதிகள் சூா்ய காந்த் மற்றும் ஜயமால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை விசாரித்து. அப்போது, ‘இணையவழி பந்தய மற்றும் சூதாட்ட செயலிகள் அசூர வளா்ச்சியடைந்து மிகப்பெரும் பொதுப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. எனவே, இதை கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில அரசுகளும் பதிலளிக்க வேண்டும்’ என உத்தரவிட்டது.
இதைத் தொடா்ந்து இந்த வழக்கை ஆக.18-ஆம் தேதி விசாரிப்பதாக நீதிபதிககள் அமா்வு தெரிவித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.