
கடவுள் சிவனின் ஆக்ரோஷமான ருத்ர தாண்டவத்தை, இந்தியா, பயங்கரவாதத்துக்கு எதிராக நடத்திய ஆபரேஷன் சிந்தூருடன் ஒப்பிட்டுப் பேசினார் பிரதமர் நரேந்திர மோடி.
ஆபரேஷன் சிந்தூர் மூலம், இந்தியா தன்னுடைய ருத்ர தாண்டவத்தை உலகுக்குக் காட்டியது. இந்திய நாட்டின் பலத்தை வெளிப்படுத்தி, நாட்டைத் தாக்க நினைப்பவர்களுக்கு பதிலடி கொடுக்கப்படும், ஒரு போதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய மக்களவைத் தொகுதியான வாரணாசியில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடக்கி வைத்துப் பேசுகையில், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பலியான 26 பேரின் குடும்பத்தினர் மீதான கவலையே, எனது இதயத்தை நிரப்பியிருக்கிறது என்றார்.
நம் நாட்டின் மகள்களுக்கு நான் கொடுத்த சத்தியம், மகாதேவரின் ஆசியோடு, ஆபரேஷன் சிந்தூர் மூலம் பூர்த்தி செய்யப்பட்டுவிட்டது. நான் ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியை மகாதேவரின் பாதங்களில் வைக்கிறேன்.
ஆபரேஷன் சிந்தூரின் பலமே, நாட்டில் உள்ள 140 பேரின் ஒற்றுமைதான் என்பதை உறுதியாக நம்புகிறேன். சிவன் என்றால் நலம் என்று அர்த்தம். ஆனால், எப்போது பயங்கரவாதம் அதன் கோர முகத்தைக் காட்டுகிறதோ, அப்போது மகாதேவன் தன்னுடைய ருத்ர ரூபத்தை எடுக்கிறார்.
ஆபரேஷன் சிந்தூரை நாட்டு மக்கள் கொண்டாடிக் கொண்டிருந்தபோது, ஒரு சிலர் மட்டும் அதை வைத்துத் தொல்லைக் கொடுத்துக் கொண்டிருந்தனர். பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் பதுங்குமிடங்களை இந்தியா அழித்தொழித்ததை காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.