
மத்திய அரசுக்கு எதிராக கேள்வி எழுப்புவது எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ராகுல் காந்தியின் கடமை என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
இந்திய - சீன எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் 2,000 சதுர கிலோமீட்டர் இந்திய நிலத்தை சீனா ஆக்கிரமித்துவிட்டதாக கடந்த 2022ல் ராகுல் காந்தி பேசியிருந்தார். இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் மேல்முறையீட்டு மனு நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் ராகுல் காந்திக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி கண்டனம் தெரிவித்தனர்.
'இந்தியப் பகுதியை சீனா ஆக்கிரமித்தது ராகுலுக்கு எப்படித் தெரியும்? ஆதாரங்கள் உள்ளதா? அவர் அங்கு சென்று பார்த்தாரா? ஆதாரங்கள் இன்றி எப்படி பேசலாம்? ஒரு உண்மையான இந்தியர் என்றால் நீங்கள்(ராகுல்) இப்படி பேசியிருக்கமாட்டீர்கள்?' என்றெல்லாம் நீதிபதிகள் தீபங்கர் தத்தா, ஏ.ஜி. மாசி அமர்வு கேள்வி எழுப்பியது. இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் பலரும் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
இந்திய பகுதியை சீனா ஆக்கிரமித்ததாக கடந்த ஒரு சில ஆண்டுகளாகவே ராகுல் காந்தி தொடர்ந்து கூறி வருகிறார்.
இந்நிலையில் ராகுலுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது பற்றி தில்லியில் செய்தியாளர்களுடன் பேசிய காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி,
"உண்மையான இந்தியன் யார் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் முடிவு செய்ய முடியாது. மத்திய அரசுக்கு எதிராக கேள்விகளை எழுப்புவது எதிர்க்கட்சித் தலைவரின் வேலை. அது அவருடைய கடமை.
இருப்பினும் அவர் கேள்விகள் கேட்கும்போதெல்லாம் அரசு பதிலளிக்க விரும்புவதில்லை. அதனால்தான் அவர்கள் நீதிமன்றத்தின் மூலமாக இப்படியெல்லாம் செய்கிறார்கள்.
என்னுடைய சகோதரர் ராகுல் காந்தி இந்திய ராணுவத்திற்கு எதிராக எதுவும் பேசவில்லை. அவர் இந்திய ராணுவத்தினர் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் வைத்திருக்கிறார். அவர் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.