
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் வழக்கில் நீதிமன்றத்திற்கு எதிராக கருத்து தெரிவித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடரப் போவதாக பாஜக கூறியுள்ளது.
இந்திய - சீன எல்லையில் 2,000 சதுர கிலோமீட்டர் இந்திய நிலத்தை சீனா ஆக்கிரமித்துவிட்டதாக கடந்த 2022ல் ராகுல் காந்தி பேசியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் மேல்முறையீட்டு மனு திங்கள்கிழமை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது,
அப்போது நீதிபதிகள் ராகுல் காந்திக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி கண்டனம் தெரிவித்தனர். 'இந்தியப் பகுதியை சீனா ஆக்கிரமித்தது உங்களுக்கு(ராகுலுக்கு) எப்படித் தெரியும்? ஆதாரங்கள் உள்ளதா? ஒரு உண்மையான இந்தியர் என்றால் நீங்கள்(ராகுல்) இப்படி பேசியிருக்கமாட்டீர்கள்?' என்றெல்லாம் நீதிபதிகள் தீபங்கர் தத்தா, ஏ.ஜி. மாசி அமர்வு கேள்வி எழுப்பியது.
இந்நிலையில் இதுபற்றி தில்லியில் செய்தியாளர்களுடன் பேசிய காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி,
"உண்மையான இந்தியன் யார் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் முடிவு செய்ய முடியாது. மத்திய அரசுக்கு எதிராக கேள்விகளை எழுப்புவது எதிர்க்கட்சித் தலைவரின் வேலை. அது அவருடைய கடமையும்கூட. அவர் ஒவ்வொருமுறை கேள்வி கேட்கும்போது மத்திய அரசு பதிலளிக்க மறுக்கிறது. ராகுல் கேள்வி எழுப்புவதில் அவர்கள் நீதிமன்றத்தின் மூலமாக இப்படியெல்லாம் செய்கிறார்கள்" என்று பேசினார்.
மேலும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் ராகுலுக்கு ஆதரவாக பேசியிருந்தனர். இந்தியா கூட்டணி எம்.பி.க்களும் ராகுலுக்கு ஆதரவு தெரிவித்ததாக காங்கிரஸ் கூறியது.
இந்நிலையில் பிரியங்கா காந்தியின் இந்த கருத்துக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பாஜக எம்.பி. மனன் குமார் மிஸ்ரா இதுபற்றி, "நீதிமன்றத்தின் கருத்துகள் பற்றி ஊடகத்தின் முன்பு பிரியங்கா காந்தி பேசியதன் மூலம் நீதிமன்றத்தை அவமதித்துள்ளார். நீதிமன்றம் என்ன சொல்ல வருகிறது என்று தெரியாமலேயே இதுபோன்ற பொறுப்பற்ற அறிக்கைகளை அவர் தொடர்ந்து கூறி வருகிறார். இதனால் நாங்கள் அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரவிருக்கிறோம். இந்த மனுவை வழக்கறிஞர் சங்கம் மற்றும் வழக்கறிஞர்கள் தாக்கல் செய்வார்கள். இந்த நாட்டின் மக்கள் இதுபோன்ற பொறுப்பற்ற அறிக்கைகளை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்" என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.