
மெபெட்ரோன் எனப்படும் போதைப் பொருள் தயாரிக்கும் தொழிற்சாலையைக் கண்டுபிடித்த மும்பை காவல்துறையினர், சட்டைகளின் படங்களை அவர்கள் குறியீடாகப் பயன்படுத்தி வந்ததைக் கண்டறிந்துள்ளனர்.
மைசூரில் உள்ள தொழிற்சாலை ஒன்றை காவல்துறையினர் சோதனை நடத்தியபோது, அங்கு மெபெட்ரோன் (MD) என்ற போதைப் பொருள் உற்பத்தி செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த போதைப் பொருள் உற்பத்தியின் மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் நபர், அதன் உறுப்பினர்களிடையே தொடர்பு கொள்ள சட்டைகளின் படங்களை குறியீடாகப் பயன்படுத்தியது உள்ளிட்டத் தகவல்களை மும்பை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.
இந்த போதைப்பொருள் கும்பல், இரண்டு குழுக்களாக செயல்பட்டு வந்துள்ளது. ஒரு கும்பல், மைசூருவில் போதைப்பொருள் தயாரிப்பதை கவனிக்கும். மற்றொன்று தயாரிக்கப்பட்ட போதைப் பொருளை மும்பைக்குக் கடத்திச் சென்று விற்பனை செய்வதைக் கவனிக்கும் வகையில் செயல்பட்டு வந்துள்ளது.
இந்த இரு கும்பலுக்கும், ஒரு கும்பலை, மற்றொரு கும்பலுக்குத் தெரியாது. பாதுகாப்புக்காக, இவர்களே அவர்களுக்குள் அடையாளங்களை மறைத்துக்கொண்டுள்ளனர். ஒரு கும்பலைப் பிடித்தாலும் அவர்களால் மற்றொரு கும்பலைக் காட்டிக்கொடுக்க முடியாதாம். இவர்கள் ஒரு கும்பலை மற்றொரு கும்பல் அடையாளம் காண சட்டைகளின் படங்களைப் பயன்படுத்தியிருப்பதை காவல் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அதாவது மைசூரு குழுவும், மும்பை குழுவும் பெங்களூருவில் சந்தித்துக் கொள்வார்கள். அப்போது ஒருவருக்கு மற்றொருவர் அணிந்திருக்கும் சட்டையின் புகைப்படம் அனுப்பிவைக்கப்படும். அந்த சட்டை அணிந்து வருபவரிடம் போதைப் பொருள் ஒப்படைக்கப்படும். இவர் யாரென்று அவருக்குத் தெரியாது, அவர் யாரென்று இவருக்குத் தெரியாமல், ஒரு பெரிய கும்பல் செயல்பட்டு வந்துள்ளது.
ஒரு நகரிலிருந்து மற்றொரு நகருக்கு சாலை வழியாகச் சென்று, பிறகு அது வாகனத்திலிருந்து இறக்கப்பட்டு, நடந்து செல்பவர்கள் மூலம் சோதனைச் சாவடிகளைக் கடந்து நகரத்துக்குள் கொண்டு செல்லப்பட்டு வந்துள்ளது.
இந்த கும்பலின் முக்கிய தலைவர் பற்றிய தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை. தேடப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஏப்ரல் மாதம், சகினாகா காவல்துறையினர், வசாய் என்ற இடத்தில் மூன்று பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.8.04 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையின் தொடர்ச்சியாக முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டு அவரிடம் நடத்திய விசாரணையில், கர்நாடகாவின் மைசூருவில் போதைப் பொருள் உற்பத்தி செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தத் தகவலையடுத்து மைசூருவில் செயல்பட்டு வந்த தொழிற்சாலையை சோதனை செய்து ரூ.381 கோடி மதிப்புள்ள பொருள்களை பறிமுதல் செய்த காவல்துறையினர், நான்கு பேரை கைது செய்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.