
புது தில்லி: உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முதல்வர் பெயரை பயன்படுத்த தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், அரசுத் திட்டங்களில் தலைவர்களின் பெயர்கள் மற்றும் படங்களைப் பயன்படுத்தத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடையும் பிறப்பித்துள்ளது.
அரசுத் திட்டங்களில், தலைவர்களின பெயர் மற்றும் புகைப்படங்களை பயன்படுத்துவது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்ததோடு, உள்நோக்கத்துடன் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும், நீதிமன்ற நேரத்தை வீணடித்துவிட்டதாகவும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அரசுத் திட்டங்களில் முதல்வரின் பெயர் மற்றும் படங்களைப் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், அரசுத் திட்டங்களுக்கான விளம்பரங்களில் முதல்வரின் புகைப்படத்தைப் பயன்படுத்தலாம். கட்சியின் கொள்கைத் தலைவா்கள், முன்னாள் முதல்வா்களின் புகைப்படங்களை அரசு விளம்பரங்களில் பயன்படுத்தக் கூடாது. மேலும், வாழ்ந்து கொண்டிருக்கும் அரசியல் தலைவா்களின் பெயா், ஆளுங்கட்சித் தலைவா்கள் பெயா், சின்னங்கள், கொடி ஆகியவற்றை பயன்படுத்தக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தது.
உயா்நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் திமுக தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், அரசியல் சண்டையை நீதிமன்றத்துக்குக் கொண்டு வராதீர்கள்.
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முதல்வர் பெயரை பயன்படுத்த தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மனுதாரர் ஒரு குறிப்பிட்ட கட்சியை மட்டும் எதிர்த்து வழக்குத் தொடர்ந்ததை ஏற்க முடியாது
அனைத்துக் கட்சிகளுமே இதுபோன்ற விவகாரத்தில் ஈடுபடுவதை மனுதாரர் எதிர்க்க வேண்டும். மனுதாக்கல் செய்ததில் உள்நோக்கம் இருப்பதாக உச்ச நீதிமன்றம் கருதுகிறது. மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படும் எனில் அனைத்து திட்டங்களையும்தான் எதிர்க்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட திட்டத்தை மட்டும் மனுதாரர் எதிர்த்து வழக்குத் தொடர்ந்திருப்பது உள்நோக்கம் கொண்டது.
அரசியல் சண்டைகள் என்பது தேர்தல் களத்தில்தான் இருக்க வேண்டுமே தவிர, நீதிமன்றங்களில் இருக்கக் கூடாது. அதிமுக ஆட்சிக் காலத்தில் அம்மா உணவகங்கள் உள்ளிட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லையா? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், நீதிமன்ற நேரத்தை வீணடித்ததற்காக, மனுதாரர் சி.வி. சண்முகத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில், முதல்வர் பெயரைப் பயன்படுத்த தடையில்லை என்று உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிக்க.. விடைபெறுகிறது பதிவு அஞ்சல்! கட்டணம் அதிகரிக்குமா? யாருக்கு சிக்கல்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.