
பதிவு அஞ்சல் முறையில் கடிதங்களை அனுப்பும் சேவை, செப்டம்பர் 1ஆம் தேதியுடன் நிறுத்தப்படுகிறது. இதன் மூலம், முக்கிய கோப்புகளை பத்திரமாக அனுப்புவதற்கான சேவை என்று மக்களால் இதுநாள்வரை நம்பப்பட்டுவந்த ஒரு சேவை விடைபெறுகிறது.
ஆனால், பதிவு அஞ்சல் முறை ஒரேயடியாக மூடப்படவில்லை. அது விரைவு அஞ்சல் முறையுடன் ஒன்றிணைக்கப்படுகிறது. எனவே, பதிவு அஞ்சலில் இருந்த அஞ்சல் சென்றடைந்ததற்கான சான்று, குறிப்பிட்ட நபரிடம் அஞ்சல் சேர்ப்பிக்கப்படுவது உள்ளிட்ட அனைத்தும் விரைவு அஞ்சலில் இருக்கும். பதிவு அஞ்சல் கோப்புகள் தனியாக இல்லாமல், விரைவு அஞ்சல் என்ற கோப்புகளுடன் இனி அனைத்து அஞ்சல்களும் இருக்கும். விரைவாக சென்று சேரும். ஆனால், சற்று கட்டணம் கூடுதலாகும்.
இந்திய அஞ்சல் சேவையின் செயல்பாட்டுக் கட்டணத்தை ஒன்றிணைக்கவும் விரைவாக அஞ்சலை சேர்க்கும் வகையிலும் இந்த மாற்றம் மேற்கொள்ளப்படுகிறது.
இரண்டு பிரிவுகளை ஒன்றிணைக்கும் போது ஒரே பிரிவில் அஞ்சல் விநியோகிக்கப்படுவதால், மக்களால் எளிதாகக் கண்காணிக்கவும் இயலும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவு அஞ்சலையும், பதிவு அஞ்சலையும் ஒன்றிணைக்கும் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆகஸ்ட் மாதம் வரை இரு சேவைகளும் இருக்கும்.செப்டம்பர் முதல், பாதுகாப்பாகச் சென்று சேர வேண்டிய அஞ்சல்களை விரைவு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். தற்போது, விரைவு அஞ்சல் மூலம் அனுப்பப்படும் அஞ்சல்கள் அடுத்த நாளே விநியோகிக்கப்படும். தொலைதூர அஞ்சல்கள் அதிகபட்சம் 5 நாள்களுக்குள் சென்று சேரும்.
நிறுத்தப்பட்டது ஏன்?
2011 - 12ஆம் ஆண்டில் இந்திய அஞ்சல் துறை, 24.40 கோடி பதிவு அஞ்சல்களைக் கையாண்டது. இது 2019 - 20ஆம் ஆண்டுகளில் 18.40 கோடியாகக் குறைந்தது. அதன்பிறகு, வாட்ஸ்ஆப், ஆன்லைன் மின்னஞ்சல், இ-வணிக நிறுவனங்கள் வந்தபிறகு, அனைத்து அதிகாரப்பூர்வ தொலைத்தொடர்புகள் கூட, டிஜிட்டல் மயமாகிவிட்டது.
எனவே, சில வேறுபாடுகளைக் கொண்ட ஒரே விதமான இரு அஞ்சல் முறைகளைப் பயன்படுத்துவது பயனில்லை என்று இந்திய அஞ்சல் துறை முடிவெடித்தது. பதிவு அஞ்சலை மூடுவது என முடிவு செய்தது.
கட்டணம் சற்று அதிகம்!
இதுவரை பதிவு அஞ்சல் அனுப்பிக் கொண்டிருந்தவர்கள், இனி சற்று அதிகக் கட்டணம் செலுத்தி விரைவு அஞ்சல் அனுப்ப வேண்டியதிருக்கும். பதிவு அஞ்சல் கட்டணம் ரூ.25 - 30 என ஆரம்பிக்கும். விரைவு அஞ்சல் கட்டணமே ரூ.41லிருந்து தொடங்கும். அதுவும் கிராமப் பகுதிகளில் மக்கள் அதிகம் பதிவு அஞ்சல்தான் பயன்படுத்தியிருப்பார்கள்.
சட்டப்பூர்வ ஆவணங்கள், அரசுத் துறைகள், கல்வி நிலையங்கள் உள்ளிட்டவை கட்டணம் குறைவு என்றுகூட பதிவு அஞ்சல் முறையைப் பயன்படுத்தி வந்திருக்கலாம். இவர்களுக்கு இந்த மாற்றம் சற்று கடினமானதாக இருக்கும்.
அதிகம் பாதிக்கப்படுவர்கள் யார்?
நீதிமன்றங்களும் வழக்குரைஞர்களும். தொலைத்தொடர்பை உறுதி செய்ய பதிவு அஞ்சலைப் பயன்படுத்தி வந்தனர்.
பல்கலைக்கழகங்கள், தேர்வு வாரியங்கள்
நுழைவுச் சீட்டு, சான்றிதழ்கள் போன்றவற்றை பதிவு அஞ்சலில் அனுப்பி வந்தனர்.
மூத்தக் குடிமக்கள் பலரும் இதுநாள் வரை பதிவு அஞ்சலைத்தான் அதிகம் நம்பியிருந்தனர்.
விரைவு அஞ்சல் முறையில் நன்மை உண்டா?
விரைவாக அஞ்சல் சென்றடையும்.
டிஜிட்டல் முறையில் அஞ்சல் எங்கிருக்கிறது என்பதை அறியலாம்.
வாடிக்கையாளர்களின் வசதி அதிகப்படுத்தப்படும் என்கிறார்கள் அஞ்சல் துறை அதிகாரிகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.