
மனிதத் திறமைக்கான எல்லையை செய்யறிவு மிக வேகமாக மாற்றியமைத்துக்கொண்டிருக்கும் வேளையில், மிகச் சிறப்பாக செயலாற்றக் கூடிய இளைஞர்களுக்கு இன்னமும் உலகில் தேவை இருக்கிறது என்பதையே, மத் டெய்ட்கேவின் செய்தி காட்டுகிறது.
வெறும் 24 வயதாகும் மத் டெய்ட்கே பற்றிய தகவல்கள், சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
பிஎச்டியை பாதியில் கைவிட்டவர், ஏஐ அடானமி என்ற புத்தாக்க நிறுவனத்தின் இணை நிறுவனர், 9 இலக்க எண் ஊதியம் கொண்ட வேலையை வேண்டாம் என்று உதறியவர் என பல அடையாளங்களுக்கும் சொந்தக்காரராகியிருக்கிறார்.
படிப்பில் சுட்டியாக இருந்த டெய்ட்கேவின் பிஎச்டி கனவு நனவாகவில்லை. இருந்தாலும் செய்யறிவு ஆய்வாளராக தனது பணியைத் தொடங்கினார். மோல்மோ என்ற ஒரு சாட்பாட் ஒன்றை உருவாக்கினார். இது வெறும் எழுத்துகளை மட்டும் புரிந்துகொள்ளாமல், ஆடியோ மற்றும் புகைப்படங்களைக் கூட புரிந்துகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டது. இது, மனிதர்களுக்கு இணையாக வேலை செய்ய வேண்டிய இயந்திர மனிதர்களுக்கு மிகவும் தேவையான ஒன்றாக இருந்தது. இதனை டெய்த்கே தனது அறிவுத்திறமையால் உருவாக்கியிருக்கிறார்.
இவரது திறமையைக் கண்டு உலகமே வியந்தது. பல்வேறு விருதுகளும் கருத்தரங்குகளும் இவரை கௌரவித்தன.
2024ஆம் ஆண்டு, மெட்டா நிறுவனம், நான்கு ஆண்டுகளுக்கு 125 மில்லியன் டாலர் ஊதியத்துடன் வேலைக்கு டெய்ட்கேவுக்கு அழைப்பு விடுத்தபோது, அவர் அதனை நிராகரித்துவிட்டார். அப்போது அது தலைப்புச் செய்தியானது. ஒரு நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டுவிட்டால், தன்னுடைய சோதனைகளை சுதந்திரமாக செய்ய முடியாது என்பதால், அப்போது அந்த வேலையை அவர் நிராகரித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, மெட்டாவின் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க், டெய்ட்கேவை நேரில் சந்தித்து, நான்கு ஆண்டுகளுக்கு 250 மில்லியன் டாலர் ஊதியத்துடன் வேலையில் சேர அழைப்பு விடுத்தார். மார்க் ஸக்கர்பெர்க்கின் அழைப்பை அவரால் மறுக்கமுடியவில்லை. இப்போது மெட்டாவின் செய்யறிவு ஆய்வகமான சூப்பர் இன்டெலிஜன்ஸ் லேப்பில் இவர் பணியமர்த்தப்பட்டுள்ளார். 250 மில்லியன் டாலர் என்பது கிட்டத்தட்ட ரூ.2,000 கோடி என்கிறார்கள்.
இதுவரை, வரலாற்றில் யாருமே வாங்காத ஒரு சம்பளமாக இது அமைந்திருந்தது. இதன் மூலம், மெட்டா, ஒரு தீவிர செய்யறிவு முறையை கையிலெடுக்க முனைந்திருப்பதையே காட்டுவதாக அமைந்துள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் செய்யறிவு குழுவில் கூட, 200 மில்லியன் டாலர்களுக்கு மிகாமல்தான் ஊதியம் வழங்கப்படுகிறது என்கின்றன தகவல்கள்.
பெரிய லாபம், பெயர் என்று ஒரே இடத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளாமல், கல்வி, அறிவு, தொழிற்சாலை அனுபவம் என பல்வேறு துறைகளில் தன்னை விரிவுபடுத்திக்கொண்டதே மத் டெய்ட்கேவின் இந்த அபரிமிதமான வளர்ச்சிக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
மத் டெய்ட்கே, பரிணாம வளர்ச்சியில் வேகமாக ஓடிக்கொண்டிருப்பவராக இல்லாமல், இவரே அந்த பரிணாம வளர்ச்சியை உருவாக்குபவராக இருக்கிறார் என்கின்றன தகவல்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.