
உத்தரகண்ட் மேகவெடிப்பைத் தொடர்ந்த பேரிடரில் மாயமானதாகக் கருதப்பட்ட கேரளத்தைச் சேர்ந்த 28 சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உத்தரகாசி மாவட்டத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பைத் தொடர்ந்து, நேற்று (ஆக.5) மதியம் மிகப் பெரியளவில், நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டு, ஏராளமான குடியிருப்புக் கட்டடங்கள் அடித்துச் செல்லப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, கேரளத்தைச் சேர்ந்த 28 சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட சுற்றுலாக் குழுவொன்று மாயமானதாகவும், அவர்களது நிலைக் குறித்து எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை எனவும் அவர்களது உறவினர்கள் கூறியிருந்தனர்.
இந்நிலையில், அப்பகுதியின் சாலைகள் முடக்கப்பட்டதால், ஆன்மிகப் பயணம் மேற்கொண்ட அவர்கள் அனைவரும், பேரிடர் ஏற்பட்ட கங்கோத்ரியில் இருந்து 4 கி.மீ. தொலைவில் சிக்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் அனைவரும் தற்போது பத்திரமாகவுள்ளதாகவும், திரும்பி வருவதற்கான பாதைகள் அனைத்தும் முடங்கியதால், அவர்களை மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை, உத்தரகண்டின் மலையாளி சமாஜம் தலைவர் தினேஷ் உறுதி செய்துள்ளார். இதுகுறித்து, அவர் கூறுகையில், சுற்றுலாக் குழுவினரின் வாகன ஓட்டுநர் அவர்கள் அனைவரும் பத்திரமாக உள்ளனர் என உறுதியளித்ததாகக் கூறியுள்ளார்.
இத்துடன், சுற்றுலாப் பயணிகளின் வாகனம் எங்குள்ளது எனக் கண்டுபிடிக்கப்பட்டதை அவர்களது உறவினர்களும் உறுதி செய்துள்ளனர்.
முன்னதாக, உத்தரகாசியில் ஏற்பட்ட பேரிடரில் ஏராளமானோர் மாயமானதாகக் கருதப்படும் நிலையில், மாநில பேரிடர் மீட்புப் படை, ராணுவம், தீயணைப்புப் படை, காவல் துறை உள்ளிட்ட ஏராளமான படைகள் அங்கு மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: அளவற்ற இணையம், ஓடிடி: ரூ.1,601-க்கு வோடாஃபோன் ஐடியாவின் புதிய திட்டம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.