
மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் வாக்காளர் பட்டியலில் போலியான பெயர்கள் சேர்க்கப்பட்டு, மிகப்பெரிய அளவில் மோசடி நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டியிருக்கும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, அதற்கான சான்றுகளையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
பல்வேறு தொகுதிகளில் நடந்த முறைகேடுகளை தனித்தனியாக எடுத்துக் காட்டி அதற்கான தரவுகளுடன் அவர் வெளியிட்டிருப்பது, தேர்தல் ஆணையத்துக்கு சவால் விடுவதாகவே உள்ளது.
குறிப்பாக, ராகுல் காந்தி சுட்டிக்காட்டியிருக்கும் மகாதேவபுரா தொகுதியில் அதிகக் கவனம் பெற்றுள்ளது.
அதாவது, கர்நாடக மாநிலம் மகாதேவபுரா தொகுதியில் தேர்தல் முடிவு மற்றும் வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து ராகுல் கூறியிருப்பதாவது, கர்நாடக மாநிலத்தின் ஒரு மண்டலத்தில் மொத்தமிருந்த 7 தொகுதிகளில் ஆறு தொகுதிகளை வென்ற காங்கிரஸ் மகாதேவபுரா தொகுதியில் தோல்வியடைந்தது. அதுவும் 1,14,000 வாக்குகள் வித்தியாசத்தில்.
இது குறித்து ஆய்வு செய்தபோது, கர்நாடக மாநிலம் மகாதேவபுரா தொகுதியில் காங்கிரஸ் குழு, ஒரு லட்சம் போலி வாக்காளர்களை அடையாளம் கண்டுள்ளது. போலியான முகவரி கொடுத்து வாக்காளர்கள் பெரிய அளவில் சேர்க்கப்பட்டிருந்தனர்.
மகாதேவபுரா பேரவைத் தேர்தலின்போது பதிவான 6.5 லட்சம் வாக்குகளில் 1 லட்சம் வாக்குகள் போலியானவை.
மகாதேவபுரா தொகுதியில் வாக்குத் திருட்டு நடந்துள்ளது. போலியான 1,00,250 வாக்குகளில், 11,965 பெயர்கள் போலியானவை. ஒரே தொகுதியில் கிட்டத்தட்ட 12 ஆயிரம் பெயர்கள் போலியாக சேர்க்கப்பட்டுள்ளன. 40,009 வாக்காளர்கள் பெயர்கள் போலியான முகவரியில் சேர்க்கப்பட்டிருந்தது.
ஒரே முகவரி அல்லது ஒரே அறையில் இருந்ததாக 10,452 பெயர்கள் சேர்க்கப்பட்டிருந்தது. 4,132 வாக்காளர்களுக்கு தவறான புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. இதில் மிக மோசமான விஷயம் என்னவென்றால், புதிய வாக்காளர்களுக்கான படிவம் 6-ஐப் பயன்படுத்தி 33,692 பேரின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளன. இவர்களில் பெரும்பாலானோர் முதல் முறை வாக்காளர்களே இல்லை என்று குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார்.
அவர் ஒவ்வொரு குற்றச்சாட்டுகளையும் முன்வைக்கும்போது, அவரது பின்னணியில் இருக்கும் திரையில், அது தொடர்பான ஆவணங்கள் காட்சிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் இது போன்ற வாக்குத் திருட்டு நடத்தப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டிய ராகுல், இது "இந்திய அரசியலமைப்புக்கும் இந்திய தேசியக் கொடிக்கும் எதிரான குற்றம் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.