
இந்தியாவில் நடைபெற்ற வாக்குத் திருட்டு குறித்த சான்றுகளை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை வெளியிட்டார்.
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குத் திருட்டு நடைபெற்றதாகவும் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடைபெற்றதாகவும் ராகுல் காந்தி குற்றச்சாட்டு எழுப்பினார்.
இதனைத் தொடர்ந்து, பிகார் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த அவர், மகாராஷ்டிரத்தை போன்று பிகாரிலும் வாக்குத் திருட்டு நடத்த முயற்சிப்பதாக தெரிவித்தார்.
இதனிடையே, மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக தெரிவித்திருந்த ராகுல் காந்தி, இன்று அதனை வெளியிட்டுள்ளார்.
தில்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல் காந்தி பேசியதாவது:
”ஒவ்வொரு தேர்தலிலும் தேர்தலுக்கு கருத்து கணிப்புகளும் தேர்தல் முடிவுகளும் வேறுபடுகின்றன. ஹரியாணா, மத்திய பிரதேசத்தில் முடிவுகள் முற்றிலும் மாறுபட்டன.
மகாராஷ்டிரத்தில் 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5 மாதங்களில் அதிகமான வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதும், மாலை 5 மணிக்கு மேல் வாக்கு சதவிகிதம் அதிகரித்ததும் எங்களுக்கு சந்தேகங்களை எழுப்பியது.
மக்களவையில் அமோக வெற்றி பெற்ற நாங்கள் சட்டப்பேரவை தேர்தலில் பெரும் தோல்வியை சந்தித்தோம். இரண்டு தேர்தலுக்கு மத்தியில் ஒரு கோடி புதிய வாக்காளர்கள் வந்ததை நாங்கள் கண்டறிந்தோம்.
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் முறைகேடு குறித்து தேர்தல் ஆணையத்திடம் குற்றச்சாட்டு எழுப்பினோம். வாக்காளார் பட்டியல் என்பது நாட்டின் சொத்து. ஆனால், அந்த பட்டியலை வழங்க தேர்தல் ஆணையம் மறுத்தது. பின்னர், சுவாரஸ்யமான ஒன்றை தேர்தல் ஆணையம் செய்தது. வாக்குச் சாவடி சிசிடிவி காட்சிகளை அழிக்கப் போவதாக கூறினார்கள். எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால், மாலை 5 மணிக்கு மேல் வாக்கு சதவிகிதம் அதிகரித்த கேள்வி எங்கள் முன் இருந்தது. இந்த இரண்டு விஷயங்களும் பாஜகவுடன் இணைந்து தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதை உறுதியாக நம்ப வைத்தன.
தேர்தலில் எப்படி மோசடி நடைபெறுகிறது என்பதை ஆராய ஆய்வுக் குழு அமைத்தோம்.
மக்களவைத் தேர்தல் தரவுகளை ஆராய்ந்தோம். தேர்தல் ஆணையம் மின்னணு தரவுகளை தராததால் ஒரு மக்களவை தொகுதியில் உள்ள ஒரு சட்டப்பேரவை வாக்காளர்களை ஆராய 6 மாதங்கள் ஆகின.
கர்நாடகத்தில் ஆட்சி அமைத்த நாங்கள் மக்களவை தேர்தலில் தோல்வி அடைந்தோம். எங்களுக்கு ஏமாற்றம் அளித்த மத்திய பெங்களூர் தொகுதியை ஆராய முடிவு செய்தோம். அதில், அனைத்து சட்டப்பேரவையிலும் வெற்றி பெற்ற நாங்கள் மகாதேவபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் மட்டும் கடும் சரிவைக் கண்டோம்.
மத்திய பெங்களூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் 6,58,915 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் 6,26,208 வாக்குகள் பெற்றனர். வெற்றி வித்தியாசம் 32,707 வாக்குகள் மட்டுமே.
மகாதேவபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 2.29 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில், 2.29 லட்சம் வாக்குகள் பாஜகவும், 1.15 லட்சம் வாக்குகள் காங்கிரஸும் பெற்றிருந்தது. வித்தியாசம் மட்டும் 1.14 லட்சம்.
இந்த தொகுதியில் மட்டும் 1,00,250 வாக்குகள் போலியானவை என கண்டறியப்பட்டுள்ளது. 5 வகையில் வாக்குத் திருட்டு நடைபெற்றுள்ளது.
மகாதேவபுரம் தொகுதியில் மட்டும் 11,965 போலி வாக்காளர்கள் கண்டறிந்துள்ளோம். மேலும், வாக்காளர் பட்டியலில் உள்ள 40,009 பேரின் முகவரி போலியானது.
ஒரே முகவரியில் பலர் என 10,452 வாக்காளர்கள், போலி புகைப்படத்துடன் 4,132 வாக்காளர்கள் உள்ளனர்.
உதாரணமாக, குர்கிராத் சிங் டாங் என்ற வாக்காளரின் பெயர் மகாதேவபுரம் தொகுதியில் உள்ள நான்கு வாக்குச் சாவடிகளில் இருக்கிறது. இந்த தொகுதியில் மட்டும் இதுபோன்ற 1,000 வாக்காளர்கள் பெயர் உள்ளது.
அடுத்து, ஒரு வாக்காளரின் பெயர் பல மாநிலங்கள் உள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ஆதித்யா ஸ்ரீவாஸ்தவா என்ற வாக்காளரின் பெயர் கர்நாடகத்தின் இரண்டு பூத்களிலும், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரத்திலும் இருக்கிறது.
போலி முகவரியில் பல வாக்காளர்கள் உள்ளனர். ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் முகவரில் பூஜ்ஜியம் என்றும், அவர்கள் தந்தையின் பெயர் ஐஜேகேஎல்எம் போன்ற எழுத்துகளும் உள்ளன.
மேலும், ஒரு அறை கொண்ட வீட்டில் வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்த 80 வாக்காளர்கள், 46 வாக்காளர்களின் பெயர் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் நேரடியாகச் சென்று சரிபார்த்துள்ளனர்.
முதல்முறை வாக்காளர்களுக்கான படிவம் 6-ல் முறைகேடு செய்யப்பட்டுள்ளது. ஷகுன் ராணி என்ற 70 வயது பெண்ணின் பெயரில் இரண்டு முறை அடுத்தடுத்த வாரங்களில் படிவம் 6 கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு வாக்காளர் அட்டையும் கொடுக்கப்பட்டு, தேர்தலின்போது இரண்டு வாக்குச் சாவடிக்கும் அவர் சென்று வாக்களித்தற்கான ஆதாரம் உள்ளது. முறையே 98, 96, 95 வயதானவர்கள் பெயரில் வாக்காளர் அட்டை உருவாக்கப்பட்டுள்ளது. இதுபோன்று 33,692 வாக்காளர்களை கண்டறிந்துள்ளோம்.
ஒரு மக்களவை தொகுதியில் உள்ள ஒரு சட்டப்பேரவையில் மட்டும் 1,00,250 வாக்குகள் திருடப்பட்டுள்ளன.
ஹரியாணாவில் 8 தொகுதிகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்தது. இந்த தொகுதிகளில் மொத்தம் 2 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ள நிலையில், வெறும் 22,779 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது காங்கிரஸ்.
ஆட்சியை தக்கவைக்க பிரதமர் மோடிக்கு 25 தொகுதிகள் தேவைப்பட்டன. பாஜக வெற்றி பெற்ற 25 தொகுதிகளில் 33,000 க்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
ஒரு சட்டப்பேரவை தொகுதியில் செய்யப்பட்டுள்ள முறைகேடுக்கான ஆதாரம்தான் இது. சிசிடிவியும் வாக்காளர் பட்டியலும்தான் இந்த குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள். அதனால்தான் இதனை அழிக்கப் பார்க்கிறார்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.