
நடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் அமளியால் இரு அவைகளும் பிற்பகல்வரையில் ஒத்திவைக்கப்பட்டது.
ஜூலை 21 ஆம் தேதியில் தொடங்கிய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்கக் கோரி, இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வந்த நிலையில், அதுதொடர்பான விவாதம் நடைபெற்றது.
இந்த நிலையில், பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி குறித்தும் விவாதிக்கக் கோரி, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்களவையில் இன்று கேள்விநேரத்தின்போது, பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் விவகாரத்தில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், அவையை பிற்பகல்வரையில் ஒத்திவைப்பதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்தார்.
இதனிடையே, மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதைக் கண்டித்த அவையின் துணைத் தலைவர் ஹரிவன்ஷ், தற்போதைய கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் அமளியால் 56 மணிநேரம் 49 நிமிடங்கள் இழக்கப்பட்டதாகக் கூறி, மாநிலங்களவையையும் பிற்பகல்வரையில் ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தில் ஒரு நிமிடத்துக்கு ரூ. 2.5 லட்சம் செலவிடப்படுவதாக 2012-ல் மதிப்பீடு வெளியிடப்பட்டது. அப்படியென்றால், தற்போதைய நாடாளுமன்றக் கூட்டத்துக்கு ஒரு நிமிடத்துக்கு ரூ. 4 லட்சம்வரையில் செலவிடப்படலாம் என்று கணிக்கப்படுகிறது.
இதன்படி, ஒரு மணிநேரத்துக்கு நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டால், ரூ. 2.4 கோடி செலவாகும்; 56 மணிநேரம் 49 நிமிடங்களுக்கு ரூ. 135.6 கோடி இழக்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.