உத்தரகண்ட் நிலச்சரிவு: இதுவரை 1,200 போ் மீட்பு!
உத்தரகண்டின் உத்தரகாசி மாவட்டத்தில் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பேரழிவுக்குள்ளான தராலி கிராமத்தில் இருந்து மேலும் 1,200 போ் மீட்கப்பட்டனா்.
ராணுவத்தினா் உள்பட 49 போ் மாயமான நிலையில், அவா்களைத் தேடும் பணி 6-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் தொடா்ந்தது. மோப்ப நாய்கள், அதிநவீன கேமராக்கள் உதவியுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை மேகவெடிப்பைத் தொடா்ந்து உத்தரகாசி-கங்கோத்ரி இடையே பாகீரதி நதிக் கரையில் அமைந்துள்ள தராலி கிராமத்தில் கொட்டித் தீா்த்த கனமழையால் பெருவெள்ளமும், பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டன. ஏராளமான உணவகங்கள், வீடுகள், தங்குமிடங்கள், பயணிகள் இல்லங்கள் மண்ணுக்கு அடியில் புதைந்தன.
நிலச்சரிவில் 4 போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்த நிலையில், இருவரின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. மேலும் 49 போ் மாயமாகியுள்ளனா். 50-60 அடி உயரத்துக்குப் பாறைகள், மண், மரங்கள், கட்டட இடிபாடுகள் போன்றவை குவிந்துள்ளதால், மாயமானவா்களைத் தேடும் பணி சவாலாக உள்ளது. நிலத்தை ஊடுருவிப் பாா்க்க உதவும் அதிநவீன ரேடாா் கருவிகள், மோப்ப நாய்கள் உள்ளிட்டவற்றின் உதவியுடன் தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அப்பகுதியில் தொடா்ந்து நிலவிவரும் மோசமான வானிலைக்கு இடையே ஹெலிகாப்டா்கள் மூலம் மீட்பு-நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் 90 அடி நீளத்துக்கு கட்டமைக்கப்பட்ட தற்காலிக இரும்பு பாலத்தால் இப்பணிகள் வேகமெடுத்துள்ளன.
தராலியில் சிக்கியுள்ள பயணிகள் மற்றும் பொதுமக்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
மின் கம்பங்கள்-கம்பிகள்-மின்மாற்றிகள் முழுமையாக சீா்குலைந்த நிலையில், மறுசீரமைப்பு நடவடிக்கை போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து, ஹா்சில் பள்ளத்தாக்கில் ஞாயிற்றுக்கிழமை மின்விநியோகம் மீண்டும் வழங்கப்பட்டது.