
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் 50 பயங்கரவாதிகள் அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கன் எல்லையில் உள்ள ஸோப் மாவட்டத்தின் சம்பாஸா பகுதியில் ஆகஸ்ட் 7 முதல் 11 வரை, பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 50 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையில் ஆகஸ்ட் 7 முதல் 9 வரை 47 குவாரிஜ்கள் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து, ஆகஸ்ட் 10ம் நள்ளிரவு முதல் 11-ம் தேதி காலை பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள சம்பாசாவைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் நடவடிக்கை மேற்கொண்டது.
இந்த நடவடிக்கையின் போது, மேலும் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களிடமிருந்து ஆயுதங்கள், வெடிமருந்துகள், வெடிபொருள்கள் ஆகியவை மீட்கப்பட்டன.
பாகிஸ்தான் ராணுவம் வெற்றிகரமான நடவடிக்கையை மேற்கொண்டதற்காக பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் செவ்வாயன்று பாதுகாப்புப் படையினரைப் பாராட்டினார்.
முன்னதாக, ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்து வரும் தலிபான்கள் கடந்த 2022-ம் ஆண்டு பாகிஸ்தான் அரசுடனான தங்களது போர்நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்தனர்.
அதன் பிறகு, பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மற்றும் பலூசிஸ்தான் மாகாணங்களில் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.