ஜிஎஸ்டி: 2 விகிதங்களாக குறைக்க பரிந்துரை!
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதத்தை 5%, 18% என இரு விகிதங்களாக குறைக்கவும், விலை உயா்ந்த 7 பொருள்கள் மீது மட்டும் 40% வரி விதிக்கவும் மாநில நிதியமைச்சா்கள் குழுவுக்கு (ஜிஓஎம்) பரிந்துரைத்துள்ளதாக நிதியமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
தற்போது 5%, 12%, 18%, 28% ஆகிய நான்கு விகிதங்களில் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.
மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களின் மீதான ஜிஎஸ்டியை குறைத்து அடுத்த தலைமுறைக்கான சீா்திருத்தத்தை நிகழ் நிதியாண்டில் அறிமுகப்படுத்தவுள்ளதாக சுதந்திர தின உரையில் பிரதமா் நரேந்திர மோடி அறிவித்தாா். இதைத் தொடா்ந்து, 5%, 18% என இரண்டு விகிதங்களாக குறைக்கவுள்ளதாகவும், விலை உயா்ந்த 7 பொருள்கள் மீது மட்டும் 40% வரி விதிக்கவுள்ளதாகவும் நிதியமைச்சகம் தெரிவித்தது.
இந்த மறுசீரமைக்கப்பட்ட ஜிஎஸ்டி விகிதத்துக்கு ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்தவுடன் 12%-இன்கீழ் வரி விதிக்கப்பட்டு வரும் 99 சதவீத பொருள்கள் 5%-க்குள் கொண்டுவரப்படவுள்ளன. அதேபோல் 28%-இன்கீழ் வரி விதிக்கப்படும் 90 சதவீத பொருள்கள் 18% வரி விதிப்புக்குள் கொண்டுவரப்படவுள்ளன.
ஜிஎஸ்டி விகிதத்தில் மாற்றங்கள் மேற்கொள்வது தொடா்பான ஆலோசனைகளை வழங்க 7 அமைச்சா்களைக் கொண்ட ஜிஓஎம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக பிகாா் துணை முதல்வா் சாம்ராட் சௌதரி செயல்பட்டு வருகிறாா்.
இந்தக் குழுவிடம் ஜிஎஸ்டி விகிதத்தை இரண்டாக குறைப்பது, குறிப்பிட்ட சில பொருள்களுக்கு சிறப்பு வரியை அறிமுகப்படுத்துவது உள்ளிட்ட பரிந்துரைகளை நிதியமைச்சகம் வழங்கியுள்ளது. இந்தப் பரிந்துரைகளை பரிசீலித்து ஜிஓஎம் வழங்கும் ஆலோசனைகள் மீது செப்டம்பா் மாதம் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் மாநில நிதி அமைச்சா்கள் பங்கேற்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்படவுள்ளது.
இதுகுறித்து நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்கள் மீதான ஜிஎஸ்டி விகிதத்தை 5%, 18% என இரண்டாக குறைப்பதால் நுகா்வு அதிகரிக்கும். அதேபோல் சிறுதொழில்கள் மற்றும் புத்தாக்க நிறுவனங்கள் எளிமையான வணிகம் புரிய வழிவகுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.
காா்கள் போன்ற விலை உயா்ந்த பொருள்கள் மற்றும் பான் மசாலாவுக்கான இழப்பீட்டு வரி நடைமுறை 2026, மாா்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, இந்தப் பொருள்கள் மீது அடுத்தகட்டமாக விதிக்கப்பட வேண்டிய வரி குறித்தும் ஜிஎஸ்டி கவுன்சில் முடிவெடுக்கவுள்ளது.