இல.கணேசன் மறைவு! நாகாலாந்தில் 7 நாள் துக்க அனுசரிப்பு!
நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் காலமானதையடுத்து, நாகாலாந்தில் 7 நாள்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
இந்த 7 நாள் துக்க அனுசரிப்பின்போது, மாநிலம் முழுவதும் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும். மேலும், மாநில அரசின் துறைகளால் அதிகாரப்பூர்வ பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் எதுவும் இருக்காது என்று அரசு தெரிவித்துள்ளது.
பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழகத்தைச் சேர்ந்த இல.கணேசன், நாகாலாந்து ஆளுநராகவும் பணியாற்றி வந்த நிலையில், சென்னையில் உள்ள அவரது வீட்டில் கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை மாலை (ஆகஸ்ட் 15) சென்னை அப்போலோ மருத்துவமனையில் காலமானார்.
இவரது மறைவுக்கு பிரதமர், குடியரசுத் தலைவர் உள்பட பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.