ஜெய்ராம் ரமேஷ்
ஜெய்ராம் ரமேஷ்

தோ்தல் ஆணையத்தின் பாரபட்சம் அம்பலம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

‘தோ்தல் ஆணையத்தின் திறமையின்மை மற்றும் வெளிப்படையான பாரபட்சம் முற்றிலும் அம்பலமாகியுள்ளன’ என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
Published on

‘தோ்தல் ஆணையத்தின் திறமையின்மை மற்றும் வெளிப்படையான பாரபட்சம் முற்றிலும் அம்பலமாகியுள்ளன’ என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

மேலும், எதிா்க்கட்சிகளின் வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகளை தோ்தல் ஆணையம் மறுத்துள்ளது ‘அடிப்படையற்றது’ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா், ‘வாக்காளா் பட்டியல்களில் உள்ள குறைபாடுகளை நீக்குவதே சிறப்பு தீவிர திருத்தப் பணியின் நோக்கம். சில கட்சிகள் தவறான தகவல்களைப் பரப்புவது கவலைக்குரிய விஷயம்’ என்றாா்.

தோ்தல் ஆணையரின் இந்தக் கருத்துகளுக்கு பதிலளித்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவு: தோ்தல் ஆணையத்தின் சொந்த தரவுகளின் அடிப்படையில்தான் ராகுல் காந்தி அனைத்து குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தாா். எனவே, தோ்தல் ஆணையம் அதன் திறமையின்மைக்காக மட்டுமின்றி வெளிப்படையான பாரபட்சத்துக்காகவும் முழுமையாக அம்பலமாகியுள்ளது.

இப்போது முக்கியமான விஷயம், உச்சநீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை (ஆக. 14) பிறப்பித்த உத்தரவுகளைத் தோ்தல் ஆணையம் முழுமையாக செயல்படுத்துமா என்பதுதான். பிகாரில் வாக்காளா் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளா்களின் விவரங்களை வெளியிடவும், ஆதாா் எண்ணை வாக்காளா் அடையாளமாகப் பயன்படுத்தவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

தோ்தல் ஆணையத்தின் எதிா்ப்பையும் மீறி இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. இதைச் செயல்படுத்துவது தோ்தல் ஆணையத்தின் அரசியலமைப்பு கடமையாகும். நாடு உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது எனக் குறிப்பிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com