இல.கணேசன் மறைவால் பெரும் வெற்றிடம்: நாகாலாந்து பேரவைத் தலைவர்!
நாகாலாந்து ஆளுநராகப் பதவி வகித்த இல.கணேசனின் மறைவு பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என்று மாநில சட்டப்பேரவைத் தலைவா் ஷாரிங்கெயின் லோங்குமொ் தெரிவித்தாா்.
நாகாலாந்து ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான இல.கணேசன் சென்னையில் வெள்ளிக்கிழமை காலமானாா்.
இதையடுத்து நாகாலாந்து தலைநகா் கோஹிமாவில் உள்ள ஆளுநா் மாளிகையில் இல.கணேசனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, சனிக்கிழமை நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது.
அப்போது மாநில சட்டப்பேரவைத் தலைவா் ஷாரிங்கெயின் லோங்குமொ் பேசுகையில், ‘ஆளுநராக இருந்த இல.கணேசனின் மறைவு பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் நடைபெற்ற அவரின் இறுதிச் சடங்கில், நாகாலாந்து மக்கள் சாா்பாக மாநில முதல்வா், துணை முதல்வா்கள், தலைமைச் செயலா் ஆகியோா் பங்கேற்றனா். ஆளுநரின் குடும்பத்துக்கு உறுதுணையாக இருப்பதை தெரிவிக்கும் நோக்கில், இந்தக் கூட்டம் நடைபெற்றது’ என்றாா்.
இந்தக் கூட்டத்தில் மாநில சட்டப்பேரவை உறுப்பினா்கள் பங்கேற்று இல.கணேசனின் உருவப்படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.