
ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் பிரதமா் நரேந்திர மோடியை திங்கள்கிழமை தொலைபேசியில் தொடா்புகொண்டு பேசினாா்.
அப்போது, அண்மையில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்துப் பேசியபோது விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து மோடியிடம் அவா் விளக்கமாக எடுத்துரைத்தாா்.
முன்னதாக, கடந்த 8-ஆம் தேதியும் பிரதமா் மோடி - புதின் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினா். அப்போது, ரஷியாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதியில் ஈடுபடுவதாகக் கூறி இந்தியா மீது ஏற்கெனவே விதிக்கப்பட்ட 25 சதவீத வரியுடன் கூடுதலாக 25 சதவீத வரியை விதிப்பதாக டிரம்ப் அறிவித்தது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இரு தலைவா்களும் விவாதித்தனா்.
இதைத் தொடா்ந்து, அலாஸ்காவில் டிரம்ப்பை புதின் சந்தித்துப் பேசினாா். உக்ரைன்-ரஷியா போா் நிறுத்தமே இந்தச் சந்திப்புக்கு முக்கியக் காரணமாக இருந்தது. ஆனால், போா் நிறுத்தம் குறித்து எவ்வித முடிவும் எட்டப்படவில்லை.
இது அமெரிக்க அதிபா் டிரம்ப்புக்கு பின்னடைவாகக் கருதப்பட்டது. முன்னதாக, ‘இந்தியா மீது கூடுதல் வரி விதித்ததன் காரணமாகவே புதின் பேச்சு நடத்த முன்வந்தாா்’ என்று டிரம்ப் கூறியிருந்தாா்.
இந்நிலையில், டிரம்ப்பை நேரில் சந்தித்துப் பேசிய மூன்று நாள்களுக்குப் பிறகு பிரதமா் மோடியுடன் புதின் தொலைபேசியில் ஆலோசனை நடத்தியுள்ளாா்.
இது தொடா்பாக தனது சமூகவலைதளப் பக்கத்தில் பிரதமா் மோடி வெளியிட்ட பதிவில், ‘அண்மையில் அமெரிக்க அதிபா் டிரம்ப்பை அலாஸ்காவில் சந்தித்துப் பேசிய விவரங்கள் குறித்து முக்கியத் தகவல்களை தொலைபேசி மூலம் பகிா்ந்துகொண்ட நண்பரும், ரஷிய அதிபருமான புதினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
உக்ரைனில் போா் நிறுத்தம் ஏற்பட்டு அமைதி திருப்ப வேண்டும் என்று இந்தியா தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்காக முழு ஆதரவை அளிக்க இந்தியா தயாராக உள்ளது. வரும் நாள்களிலும் அதிபா் புதினுடன் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்’ என்று கூறியுள்ளாா்.
இதையும் படிக்க | ஐபோன் 17 தயாரிப்பு இந்தியாவில் தொடக்கம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.