
இந்தியாவில் ஐபோன் 17 தயாரிப்புப் பணிகள் தொடங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவில் ஐபோன் உதிரி பாகங்களைத் தயாரிக்கும் ஃபாக்ஸ்கான் ஆலையில் ஆப்பிள் ஐபோன் 17 ஸ்மார்ட்போன் தயாரிப்புப் பணிகள் தொடங்கியுள்ளன.
மின்னணு சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஐபோன் 17, செப்டம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தயாரிப்புப் பணிகள் இந்தியாவில் தொடங்கியுள்ளன.
அமெரிக்காவுக்குச் சொந்தமான ஆப்பிள் நிறுவனம், ஐபோன் 17, ஐபோன் 17 ஏர், ஐபோன் 17 ப்ரோ, மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஆகிய நான்கு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளது.
பெங்களூருவில் உள்ள ஃபாக்ஸ்கான் ஆலையில் இதற்கான தயாரிப்புப் பணிகள் தொடங்கியுள்ளன. ஆப்பிள் நிறுவனத்துக்கு உலகில் மிகப்பெரிய தயாரிப்பு வசதி உடைய இரண்டாவது ஆலை இதுவாகும். முதலிடத்தில் சீனா உள்ளது.
ஆங்கில ஊடகமான சி.என்.பி.சி. தகவலின்படி, சென்னை அருகேவுள்ள ஃபாக்ஸ்கான் ஆலையிலும் ஐபோன் தயாரிப்புப் பணிகள் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது.
2025 மார்ச் மாத நிதியாண்டின்படி, இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட ஐபோன் தயாரிப்பு மதிப்பு 22 மில்லியன் டாலர்கள். 2026 நிதியாண்டில் இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2025 ஜூன் மாதம் அமெரிக்காவில் விற்பனையான ஐபோன்களில் பெரும்பான்மையானவை இந்தியாவில் தயாரிக்கப்பட்டவையே என ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் புதிய வரி விதிப்பானது, ஃபாக்ஸ்கான் தயாரிப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
எனினும், ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து ஐபோன்களை இந்தியாவில் தயாரித்து உலக சந்தைக்கு எடுத்துச் செல்கிறது. டிரம்ப் வரி விதிப்பு அமலுக்குப் பிறகு, இந்தியாவில் உற்பத்தியான ஐபோன்களுக்கு அமெரிக்காவில் கூடுதல் விலை கொடுக்க வேண்டியிருக்கும்.
இந்தியாவில் இருந்து செய்யப்படும் இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பதாக டிரம்ப் அரசு அறிவித்துள்ளது. எனினும், ஆப்பிள் நிறுவனம், ஐபோன் தயாரிப்புகளை இந்தியாவில் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | கீழே தவறினாலும் உடையாத ஸ்மார்ட்போன்! அடுத்த மாதம் வெளியாகிறது ஓப்போ எஃப் 31!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.