தே.ஜ. கூட்டணி எம்பிக்கள் கூட்டம்: பிரதமர் மோடி, சி.பி. ராதாகிருஷ்ணன் பங்கேற்பு!
தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்களின் கூட்டம் நாடாளுமன்ற நூலக கட்டடத்தில் தொடங்கிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் பதவி விலகியதைத் தொடர்ந்து, அந்தப் பதவி காலியானதாக அறிவிக்கப்பட்டு செப்டம்பர் 9 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பாஜக ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் குடியரசு துணைத் தலைவர் தோ்தல் வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் தோ்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணித் தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பு தலைவர்களைச் சந்திக்கும் நோக்கில் சி.பி.ராதாகிருஷ்ணன் தில்லிக்கு திங்கள்கிழமை வந்து பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்துப் பேசினார்.
அதனைத் தொடர்ந்து இன்று(ஆக.19) பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்தில், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு கோரப்படுகிறது.
மேலும், இந்தக் கூட்டத்தில் சி.பி.ராதாகிருஷ்ணனை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து சி.பி. ராதாகிருஷ்ணன் புதன்கிழமை வேட்பு மனுத் தாக்கல் செய்யவுள்ளார்.
இந்தக் கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஜிதேந்திர சிங், சம்பித் பத்ரா, சுபாஷ் பரலா, கிரண் ரிஜிஜு, அர்ஜுன் ராம் மேக்வால், எல்.முருகன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர்.
எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் இன்று பிற்பகலில் அறிவிக்கப்படவுள்ளது.
Narendra Modi arrives Parliament Library Building for the meeting of the NDA Parliamentary Party
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

