
பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தொடர்பாகத் தேர்தல் ஆணையத்திற்கு எதிரான தாக்குதலை எதிர்க்கட்சித் தலைவர்கள் செவ்வாய்க்கிழமை தீவிரப்படுத்தினர்.
முன்னதாக நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில், இன்றும் தேர்தல் ஆணையம், மத்திய அரசைக் கண்டித்து இந்தியா கூட்டணி எம்பிக்கள் தேர்தல் ஆணையர்களின் படங்களைக் கொண்ட பெரிய பதாகையை ஏந்தியும், தேர்தல் ஆணையத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் குழுவில் உள்ள மற்ற இரண்டு தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோரின் படம் பொறிக்கப்பட்ட பதாகையில் வாக்குத் திருட்டு மற்றும் கண்ணுக்குத் தெரியாத மோசடி என்ற வார்த்தைகளும் எழுதப்பட்டிருந்தன.
நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த போராட்டத்திற்குக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமை தாங்கினார். அவருடன் அகிலேஷ் யாதவ், பிரியங்கா காந்தி வத்ரா உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.
நாடாளுமன்ற போராட்டத்தின் காணொளியை கார்கே எக்ஸில் பகிர்ந்துகொண்டார்.
தேர்தல் ஆணையம் அதன் அரசியலமைப்பு பொறுப்பிலிருந்து தப்பிக்க முடியாது. இந்தியா கூட்டணி சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் குறித்து ஆதாரங்களுடன் கேள்விகளை எழுப்பியுள்ளது, தேர்தல் ஆணையம் எதிர்க்கட்சிகளை மிரட்டுவதன் மூலம் அல்ல, விசாரணை மூலம் பதிலளிக்க வேண்டும்.
சாலைகளிலிருந்து நாடாளுமன்றம் வரை வாக்களிக்கும் உரிமைக்கான போராட்டம் தொடர்கிறது என்று அவர் இந்தியில் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.