
பாஜகவினர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக நிறுத்தினால் அவர்களுக்கு தமிழக மக்கள் மீது அக்கறை என்று அர்த்தமல்ல என திமுக எம்.பி. கனிமொழி கூறினார்.
செப். 9 நடைபெறவுள்ள குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மகாராஷ்டிர ஆளுநராகப் பதவி வகித்துவந்த சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வேட்பாளராக தோ்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்தியா கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்ஷன் ரெட்டி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சி.பி. ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று தமிழக பாஜக மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இதுபற்றி பேசிய திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி,
"இது ஒரு சித்தாந்த ரீதியான போராட்டம். ஹிந்துத்துவா, ஆர்எஸ்எஸ் பின்னணியில் இருந்து வரும் பாஜக வேட்பாளருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றாக முன்வந்து ஒரு வேட்பாளரைத் தேர்வு செய்திருக்கிறார்கள். பாஜகவினர் பிரிவினைவாத அரசியலை செய்கிறார்கள். அதை நாங்கள் எதிர்க்கிறோம்.
எதிர்க்கட்சிகள் தேர்வு செய்துள்ள வேட்பாளர் அரசியலமைப்பை மதிக்கும் ஒருவர். நாட்டு மக்களை மதிக்கும் ஒருவர். மக்கள் நலன் விரும்புவோர், ஜனநாயகத்தைக் காக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்ஷன் ரெட்டிக்கு வாக்களிக்க வேண்டும்.
நீங்கள் (பாஜக) தமிழ்நாட்டிலிருந்து ஒரு வேட்பாளரை நிறுத்துகிறீர்கள் என்பதற்காக நீங்கள் தமிழ்நாட்டின் மீது அக்கறை கொண்டவர்கள் என்று அர்த்தமல்ல.
தமிழ்நாடு, தமிழ் மொழி அல்லது மாநிலத்தின் மதிப்புகளைப் பற்றி கவலைப்படுகிறீர்கள் என்று அர்த்தமல்ல. ஏனெனில் அவர்கள் தமிழ்நாட்டிற்கான நிதியைக்கூட கொடுக்கவில்லை. தமிழ்மொழியை அவர்கள் கண்டுகொள்ளவில்லை, ஹிந்தியை திணிக்கிறார்கள். எங்களுடைய வரலாறை அவர்கள் திருத்தப் பார்க்கிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் மீது அவர்களுக்கு எந்த மரியாதையும் இல்லை" என்று பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.