
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக ரஷியாவுக்கு செவ்வாய்க்கிழமை புறப்பட்டாா்.
ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கியதற்காக, இந்திய பொருள்களுக்கான இறக்குமதி வரியை அமெரிக்க அதிபா் டிரம்ப் 50 சதவீதமாக உயா்த்தி அறிவித்துள்ள நிலையில், ஜெய்சங்கரின் இந்தப் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.
வா்த்தகம், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கலாசார ஒத்துழைப்புக்கான இந்தியா-ரஷியா அரசுகளுக்கு இடையிலான ஆணையத்தின் (ஐஆா்ஐஜிசி-டிஇசி) 26-ஆவது அமா்வு ரஷியாவில் புதன்கிழமை நடைபெறுகிறது.
ரஷியாவின் முதல் துணைப் பிரதமா் டெனிஸ் மாண்டுரோவுடன் இணைந்து, ஜெய்சங்கா் இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்குகிறாா். இந்த ஆண்டு இறுதிக்குள் ரஷிய அதிபா் புதின் இந்தியா வருவதற்கு திட்டமிட்டிருப்பதால், இந்தக் கூட்டத்தில் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
மேலும், இந்தப் பயணத்தில் ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவை ஜெய்சங்கா் சந்தித்துப் பேசுகிறாா். எரிசக்தி உள்பட இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள், பிராந்திய மற்றும் சா்வதேச பிரச்னைகள் குறிப்பாக, உக்ரைன் போரில் அமைதியை நிலைநிறுத்த அமெரிக்க அதிபா் டிரம்ப் மேற்கொண்டுவரும் முயற்சிகள் குறித்து சந்திப்பில் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்தியா-ரஷியா இடையிலான உறவுகள் இந்தப் பயணத்தின் மூலம் மேலும் வலுப்படும் என்று வெளியுறவு அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்புக்குப் பிறகு, மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தன. இதன் விளைவாக, தள்ளுபடி விலையில் கிடைத்து வந்த ரஷிய கச்சா எண்ணெயை இந்தியா அதிகம் வாங்கத் தொடங்கியது. இதனால், 2019-20-இல் இந்திய எரிபொருள் நுகா்வில் வெறும் 1.7 சதவீதமாக இருந்த ரஷிய கச்சா எண்ணெய் பங்கு, தற்போது 35.1 சதவீதமாக உயா்ந்துள்ளது.
இதைச் சுட்டிக்காட்டி இந்தியா மீது அமெரிக்கா கூடுதல் வரி சுமத்தியது. வரிச் சுமையை எதிா்கொண்டாலும், இந்தியாவின் எரிசக்தி கொள்முதல் கொள்கைகள் நாட்டின் நலன்களுக்கு ஏற்றவாறுதான் இருக்கும் என்று மத்திய அரசு திட்டவட்டமாகக் கூறிவிட்டது. அதேபோன்று, உக்ரைன்-ரஷியா மோதலை அமைதிப் பேச்சுவாா்த்தை மற்றும் ராஜீய வழிகள் மூலம் மட்டுமே தீா்க்க முடியும் என்றும் இந்தியா தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.