
ஆளுநர் தனது விருப்பப்படி மசோதாவை நிறுத்திவைத்தால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு, ஆளுநரின் விருப்பப்படி செயல்படுகிறதா? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மாநில அரசுகள் அனுப்பும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவர், ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்தது தொடர்பான வழக்கின் விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய சிறப்பு அமர்வு முன்பாக இன்று(ஆக. 20) நடைபெற்றது.
இன்றைய விசாரணையில் மத்திய அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தன்னுடைய தரப்பு வாதங்களை முன்வைத்தார்.
ஆளுநருக்கான அதிகாரங்களை துஷார் மேத்தா பட்டியலிட்ட நிலையில், 'இத்தகைய அதிகாரத்தால் ஆளுநர் மசோதாவை நிறுத்திவைக்க முடியும் அல்லவா? மசோதாவை மறுபரிசீலனைக்கு அரசுக்கு, ஆளுநர் அனுப்பிவைக்காவிட்டால் அவர் மசோதாவை நீண்ட நாள் நிறுத்திவைப்பார் அல்லவா? ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஆளுநரின் விருப்பப்படி இருக்க வேண்டுமா?' என்று தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் கேள்வி எழுப்பினார்,
'ஆளுநர் ஒன்றும் தபால்காரர் அல்ல. அவர் இந்திய அரசை பிரதிநித்துவப்படுத்துகிறார். குடியரசுத்தலைவரால் நியமிக்கப்பட்டவர்.
மக்களால் நேரடியாகத் தேர்வு செய்யப்படாதவர் என்றாலும் அவர் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு எந்த விதத்திலும் குறைவானவர் அல்ல.
ஆளுநர் தனது விருப்ப உரிமையை பயன்படுத்தி மசோதாவை நிறுத்திவைக்க முடியவில்லை என்றால் அவரது அலுவலகம் வெறும் தபால் அலுவலமாக மட்டுமே இருக்கும்' என்று துஷார் மேத்தா தெரிவித்தார்.
சட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்பட்டன என்பது குறித்து பல ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் நீதிமன்றம் அரசியலமைப்பை விளக்குகிறது என்று நீதிபதி நரசிம்மா கூறினார்.
அவைத் தலைவர்களின் நடவடிக்கை பல சந்தர்ப்பங்களில், 'ஆபரேஷன் சக்ஸஸ், பேஷண்ட் டெட்' என்ற நிலையிலே இருப்பதாக தலைமை நீதிபதி கூறினார்.
ஆளுநர் ஒரு மசோதாவை நிறுத்திவைத்தால் சட்டம் நிறைவேறாது என்ற சொலிசிட்டர் ஜெனரல் கருத்துக்கு பதிலளித்த நீதிபதிகள்,
"மசோதாவுக்கு ஒப்புதல் தர தாமதமானால் அதற்கான காரணங்களை கூறி மசோதாவில் திருத்தம் மேற்கொள்ள அரசுக்கு அறிவுறுத்தலாம். அரசு அவற்றை திருத்தும்பட்சத்தில் ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஒப்புதலைத் தடுத்து நிறுத்தும் ஆளுநரின் அதிகாரம் திறந்த நிலையில் விடப்பட வேண்டும்.
ஆளுநர் ஒரு மசோதவை நிரந்தரமான கிடப்பில் போட முடியும் என்று எந்த தீர்ப்பும் இல்லை, எந்த அதிகாரமும் இல்லை.
அரசமைப்புச் சட்டங்கள் சரியாகத்தான் இருக்கின்றன, அதனைச் செயல்படுத்துவதில்தான் சிக்கல் இருக்கிறது" என்று கூறி வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.
வழக்கின் பின்னணி
தமிழக அரசு அனுப்பிய பல்வேறு மசோதாக்கள் மீது ஆளுநர் ஆர்.என். ரவி குறிப்பிட்ட கால வரம்புக்குள் உரிய முடிவு எடுக்கவில்லை எனக் கூறி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த ஏப்ரலில் தீர்ப்பு வழங்கியது. அதில், 10 மசோதாக்கள் மீது உரிய முடிவெடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தியது சட்டவிரோதமானது எனத் தெரிவித்த உச்சநீதிமன்றம், மாநில அரசால் நிறை வேற்றி அனுப்பப்படும் மசோதாக்கள் மீது ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் ஒட்டுமொத்தமாக மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என தீர்ப்பில் குறிப்பிட்டது.
இந்தக் காலவரம்பு குறித்து 14 கேள்விகளை எழுப்பி உச்சநீதிமன்றத்திடம் தெளிவுரை கேட்டு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு ஒரு குறிப்பை அனுப்பியிருந்தார்.
குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்ட வழக்கை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய சிறப்பு அமர்வு விசாரணை மேற்கொண்டு இந்தவழக்கில் மத்திய அரசும், அனைத்து மாநில அரசுகளும் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியது.
அதன்படி இந்த வழக்கில் மத்திய அரசும் தமிழக அரசும் எழுத்துப்பூர்வ பதில் அளித்திருந்த நிலையில் பி.ஆர்.கவாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய சிறப்பு அமர்வு முன்பாக வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.