
புது தில்லி: பிகாரில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட அல்லது விடுபட்ட வாக்காளர்கள், தங்களது ஆதார் எண்ணுடன் இணையதளம் வாயிலாகவே மீண்டும் விண்ணப்பிக்க உச்ச நீதிமனற்ம் அனுமதி வழங்கியுள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க, மக்களுக்கு உதவுமாறு பதிவு செய்யப்பட்ட 12 பெரிய அரசியல் கட்சிகளுக்கும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியிருக்கிறது.
சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் பிகாரில், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த முறை மேற்கொள்ளப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
கடந்த விசாரணையின்போது, வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள், விடுபட்டதற்கான காரணம் உள்ளிட்டவற்றுடன் இணையதளத்தில் வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு உச்ச -நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், இன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட 11 ஆவணங்கள் அல்லது ஆதார் எண்ணை வைத்து விண்ணப்பிக்க அனுமதி அளித்துள்ளனர். மேலும், இந்த நடைமுறையானது வாக்காளர்களுக்கு எளிமையாக இருக்கும்படி அமைத்துத் தர வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது.
வரைவு வாக்காளர் பட்டியலில் 65 லட்சம் வாக்காளர்கள் விடுபட்டிருக்கும் நிலையில், வாக்காளர்களுக்கு உதவ முன் வராத அரசியல் கட்சிகளின் செயல், ஆச்சரியமளிப்பதாகவும் உச்ச நீதிமன்றம் விமர்சனம் செய்திருக்கிறது.
மேலும், வரைவு வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட வாக்காளர்களின் விண்ணப்பக் கோரிக்கைகளை அளித்தது குறித்து அனைத்து அரசியல் கட்சிகளும் அடுத்த விசாரணையின்போது அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டு, செப்டம்பர் 8ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.
வாக்குச்சாவடி ஏஜெண்டுகள் அளிக்கும் வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்களுக்கான விண்ணப்பங்களுக்கு உரிய ரசீதுகளை வழங்கவும் தேர்தல் அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.