
இந்தியாவில் உள்ள மாநில முதல்வர்களில் 40 சதவீதம் பேருக்கு எதிராக குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.
குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு 30 நாள்கள் சிறையில் அடைக்கப்படும் பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்கள் பதவி பறிப்புக்கான சட்ட மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியிருக்கும் நிலையில், இந்திய ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு இந்த தரவுகளை வெளியிட்டுள்ளது.
அதாவது, நாட்டில் உள்ள 30 மாநில முதல்வர்களில் 12 பேர் (40%), தங்கள் மீது குற்ற வழக்குகள் இருப்பதாக தெரிவித்துள்ளதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பின் புதிய அறிக்கை தெரிவித்துள்ளது.
இதில், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி 89 வழக்குகளுடன் முதல் இடத்தில் உள்ளார். இவர்தான் இந்தியாவிலேயே அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கும் முதல்வர். அடுத்த இடத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இருக்கிறார். இவர் மீது 47 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக, தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்திருக்கிறார்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மீது 19 வழக்குகளும், கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது 13 வழக்குகளும், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மீது 5 வழக்குகளும் உள்ளன.
மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், இமாசல் முதல்வர் சுக்வீந்தர் சிங் மீது தலா 4 வழக்குகளும், கேரள முதல்வர் பினராயி விஜயன் மீது 2 வழக்குகளும், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மன் மீது ஒரு வழக்கும் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த தரவுகளில், 10 மாநில முதல்வர்கள் மீது, கொலை முயற்சி, ஆள் கடத்தல், லஞ்ச முறைகேடு உள்ளிட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும், மாநில முதல்வர்களாக இருப்பவர்கள், தேர்தலின்போது கொடுத்த பிரமாணப் பத்திரத்தில் அளிக்கப்பட்ட தகவல்களிலிருந்து திரட்டப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
புதிய சட்ட மசோதாக்கள்!
தீவிர குற்றப் புகாரில் கைது செய்யப்பட்டு 30 நாள்கள் காவலில் வைக்கப்படும் பிரதமா், மாநில முதல்வா்கள் மற்றும் அமைச்சா்களைப் பதவியிலிருந்து நீக்கம் செய்வதற்கான மூன்று சட்ட மசோதாக்களை மத்திய அரசு கொணடு வந்துள்ளது.
ஆனால், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் வரை எந்தவொரு தனிநபரும் அப்பாவிதான். அந்த வகையில் இந்த மசோதாக்கள் குற்றவியல் நீதிக்கும் நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கும் எதிரானவை. அரசியல் ரீதியில் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு, இந்த மசோதாக்கள் வழிவகுக்கும் என்று என்று கூறி எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.